நூல் இழைகளால் காமராஜர் உருவத்தை வரைந்து அசத்திய வத்திராயிருப்பு மாணவர்!

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: காமராஜரின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர் ஜெகதீசன், நூல் இழைகளை கொண்டு உருவாக்கிய காமராஜரின் படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் ஜெகதீசன் (15). செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் ஜெகதீசன் தாயுடன் தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். ஜெகதீசன் வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார். இன்று காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெகதீசன் ஒரு பலகையில் நூல்களை கட்டி ஆசிரியர்களிடம் வழங்கினார்.

அந்தப் பலகையை சுவரில் மாட்டிய போது நூலில் உள்ள இடைவெளியில் காமராஜர் உருவம் தத்ரூபமாக தெரிந்தது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவரின் இந்த முயற்சியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய மாணவர் ஜெகதீசன், "எனது நண்பர் மூலம் கட்டையில் நூலைக் கட்டி ஓவியம் வரைவது குறித்து தெரிந்து கொண்டேன். பல்வேறு பொருட்கள் மற்றும் விலங்குகளின் உருவத்தை நூல் மூலம் கட்டி வரைந்த நிலையில், கிரிக்கெட் வீரர் டோனியின் பிறந்த நாளில் அவரது உருவத்தை நூல் மூலம் வரைந்தேன். காமராஜரின் பிறந்த நாளில் அவரது உருவத்தை நூல் மூலம் வரைய முடிவு செய்து, 3 நாட்களில் காமராஜரின் உருவத்தை நூலில் வரைந்து பள்ளிக்கு அன்பளிப்பாக அளித்தேன்” என மாணவர் ஜெகதீசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE