மலையாள சிறுகதையை இந்தியில் மொழிபெயர்த்த புலம்பெயர் தொழிலாளி மகன்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: புலம்பெயர் தொழிலாளரின் மகன் ஆரியன் தாக்கூர் மலையாளத்தில் இருந்து இந்தியில் மொழிபெயர்த்த சிறுகதையை கேரள பள்ளி புத்தகமாக வெளியிட்டது.

பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் இருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சனோஜ் குமார் தாக்கூர் மற்றும் டிம்பிள் தேவி தம்பதியினர். கேரளாவில் முடி திருத்தும் பணி செய்துவரும் சனோஜ் குமாருக்கும் அவரது மனைவிக்கும் பிறந்த மகன் ஆரியன் தாக்கூர். இவர் கொச்சியில் உள்ள புனித ஆல்பர்ட் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆரியனுக்கு இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் இருப்பதைக் கவனித்த இந்தி ஆசிரியர் ஜோதி பாலா ஊக்கமளித்தார். இதனால் தனது பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சிறுகதையை இந்தியில் மொழிபெயர்த்தார் மாணவர் ஆர்யா. பிரபல மலையாள சிறுகதை எழுத்தாளர் ஏ.எஸ். பிரியாவின் ‘உள்ளித்தேயாளும் ஒன்பத்திந்தே பட்டிக்காயும்’ என்ற தலைப்பிட்ட 19 பக்கங்கள் கொண்ட சிறுகதையை ஒன்றரைமாதத்தில் இந்தியில் மொழிபெயர்த்து முடித்துள்ளார். மாணவர் ஆரியா 7-ம் வகுப்புவரை படித்துவந்த  ருத்ரா விலாசம் நடுநிலைப்பள்ளி இதனைபுத்தகமாக தொகுத்து கடந்த ஜூலை 11-ம் தேதி வெளியிட்டது.

நூல் வெளியீட்டு விழாவில் மூலநூல் ஆசிரியர் பிரியா ஏ.எஸ்.சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர் ஆரியாவின் மொழிபெயர்ப்பு திறன் குறித்து அவர் கூறியதாவது:

உலகம் எப்படிப்பட்டது என்பதை ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து எனது சிறுகதை பேசியது. அதற்கு மொழிபெயர்ப்பாளர் நியா யம் செய்திருக்கிறார். மொழியை கடந்து கதை ஓட்டத்தை உள் வாங்கும் தருணத்தில்தான் ஒருநல்ல மொழிபெயர்ப்பாளர் பிறக்கிறார்.

ஏனெனில் இலக்கியம் என்பது மொழி மட்டுமல்ல; அது வாழ்க்கையைப் பற்றியதாகும். வெளி மாநிலத்திலிருந்து வரும் மாணவர்களும் மலையாள நூல்களை நேசித்து வாசித்து ரசிக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு ஆசிரியர் பிரியா கூறினார்.

மொழிபெயர்க்கும் செயல்முறை தனக்கு பிடித்ததென்றும்; மேலும் பல படைப்புகளை எதிர்காலத்தில் மொழிபெயர்க்க ஆவலாக இருப்பதாகவும் மாணவர் ஆரியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE