சோரியாசிஸ் பாதிப்புக்கு புதிய தீர்வு: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இணைந்து தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் சாதனை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் இணைந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சோரியாசிஸ் பாதிப்புக்கு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் மருத்துவத்துறை தலைவர் ஜே.ததேயுஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''சோரியாசிஸ் நோய்: சோரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் அழற்சி தோல் நோயாகும். இது மொத்த மக்கள் தொகையில் 2 முதல் 3 சதவீதம் பேரை பாதிக்கிறது. இவர்களில் சுமார் 20 முதல் 30 சதவீத நோயாளிகள், மூட்டுகளையும் தாக்கும் சோரியாடிக் ஆர்த்ரைடிஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சோரியாசிஸ் நோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இன்னும் இதற்கான ஒரு முழு தீர்வு அளிக்கும் சிகிச்சை முறை எட்டப்படவில்லை. எனவே, நோயை மாற்றியமைக்கும் அல்லது தீவிரத்தை குறைக்கும் சிகிச்சைகளே நடைமுறையில் உள்ளன.

நியூ ரீபிக்ஸ்: இந்நிலையில், ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆலோசனையோடு 'நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான்' (Neu REFIX Beta glucan) என்ற மருந்தை சோரியாசிஸ் தோல் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அளித்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைப்பதை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தோல் மருத்துவத் துறை மருத்துவ குழுவினர் கண்டறிந்துள்ளோம்.

சோரியாசிஸ் தோல் நோயால் பாதிக்கப்பட்டோர் 28 நாட்களுக்கு நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான் உட்கொண்டதை தொடர்ந்து, நோயின் அறிகுறிகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆலோசனையோடு, நாங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவுகள் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நேற்று முதல் நாளை (ஜூன் 27 முதல் 29) வரை நடைபெறும் சர்வதேச தடிப்புத் தோல் அழற்சி சங்கங்களின் 7-வது உலக சோரியாசிஸ் மற்றும் சோரியாடிக் ஆர்த்ரிடிஸ் மாநாட்டில் பகிரப்பட்டது.

ஆய்வில் உறுதி: மேலும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜே.சுரேஷ் துரை மற்றும் ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள ஒபிஹிரோ மருத்துவமனையின் நோயியல் பகுப்பாய்வு நிபுணர் டாக்டர் இச்சிரோ மியுரா ஆகியோர், நோய் அறிகுறிகளில் ஏற்பட்ட வெளிப்படையான முன்னேற்றத்தை, பாதிக்கப்பட்ட தோல் பகுதி திசுக்களின் உள்விளைவுகளை நுணுக்கமாக ஆராய்ந்து உறுதிசெய்துள்ளனர். நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான்களை பயன்படுத்தி நடத்திய முந்தைய மருத்துவ ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட, ஜப்பானிய விஞ்ஞானிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் 30 நோயாளிகளுக்கு இந்த சோதனையை நடத்தினோம்.

80 சதவீதம் முன்னேற்றம்: அவர்களில் 20 பேர் வழக்கமான சிகிச்சைகளுடன் நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான் உட்கொண்டனர். மற்ற 10 பேர் வழக்கமான சிகிச்சைகளை மட்டுமே மேற்கொண்டனர். ஆய்வில், நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான் உட்கொண்ட 80 சதவீத நோயாளிகள் தங்கள் தோல் நிலையில் முன்னேற்றங்களை உணர்ந்தனர். தோலில் லிம்போசைட்டுகளின் ஊடுருவல், தோல் தடிமன், புண்களின் வீரியம் ஆகியவை வழக்கமான சிகிச்சையை மட்டுமே எடுத்துக்கொண்டவர்களைவிட நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான் உட்கொண்டவர்களுக்கு கணிசமாகக் குறைந்தது. சோரியாசிஸ் நோயின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கான பாசி (PASI) ஸ்கோரும் நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான் உட்கொண்ட குழுவில் கணிசமாகக் குறைந்துள்ளது.

புதிய தீர்வு: 2009-ல் ஜப்பானில் தொடங்கிய ஆரோபாசிடியம் புலுலன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் பீட்டா க்ளுக்கான் குறித்து எலிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சி பாதுகாப்பை மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை பயனுள்ள வகையில் மாற்றுவதையும் உறுதிப்படுத்தியது. தொடர்ந்து ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மற்றும் டச்சேன் தசைநார் சிதைவு நோயாளிகளில் நடத்திய மருத்துவ ஆய்வுகள், நியூ ரீபிக்ஸ், குடல் நுண்ணுயிரிகளை மறுசீரமைப்பதன் மூலம், பல நோயாளிகளுக்கு பலன் அளித்தது. தற்போது சோரியாசிஸ் நோயாளிகளுக்கும் நியூ ரீபிக்ஸ் பீட்டா க்ளுக்கான் ஒரு நம்பிக்கையாக உள்ளது.

இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் உலக தடிப்புத் தோல் அழற்சி தினத்தை (World Psoriasis Day) நினைவுகூரும் வகையில் ஒரு சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்யவும், அதில் இந்த ஆராய்ச்சி முடிவுகளை பகிரவும் திட்டமிட்டுளோம்.'' இவ்வாறு ஜே.ததேயுஸ் தனது பேட்டியில் தெரிவித்தார். அப்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

26 days ago

மேலும்