பெண்களுக்கு யோகா வழங்கும் அதிகாரமும் 4 குறிப்புகளும் | உலக யோகா தினம்

By எஸ்.ரவிகுமார்

உலக யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சியால் ஐ.நா. சபையில் இந்தியா கொண்டுவந்த தீர்மானம் ஏற்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 10-வது ஆண்டு யோகா தினம்.

‘மகளிர் அதிகாரத்துக்காக யோகா’- ‘தனக்கும், சமூகத்துக்குமான யோகா’ என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல், மனம், உணர்வு, சமூக, ஆன்மிக ரீதியாக பெண்களை மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். முறையாக யோகா செய்வதன் மூலம் நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வு, நம்பிக்கை, துணிச்சல் மிகுந்த செயல்பாடுகள், மேம்பட்ட திறன், மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை பெண்கள் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தவிர, பெண்கள் யோகப் பயிற்சி பெறுவது, அந்த குடும்பத்தோடு சமூகத்தையும் மேம்படுத்தும். பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இதுதவிர, பல்வேறு நோய்கள், உடல் உபாதைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, பள்ளிக் கல்வி பெறும் சிறுமிகள் தொடங்கி, கல்லூரி மாணவிகள், அலுவலகம் செல்வோர், இல்லத்தரசிகள், தொழில் முனையும் மகளிர், உடல் உழைப்பு தொழிலாளர், மகளிர் தொழிலதிபர்கள் என அனைவருக்கும் நோயற்ற வாழ்வு அவசியம். உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும், மனதை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வைத்திருந்தால்தான் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க முடியும். யோகாவால் அதை சாதிப்போம்!

பெண்களுக்கு பரவலாக ஏற்படும் உடல்நல பாதிப்புகள், முறையாக பயிற்சி பெற்று யோகாசனம் செய்வதால், அந்த பாதிப்புகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம், எப்படி வராமல் தவிர்க்கலாம் என்பதற்கான அறிமுகம்தான் இது. மருத்துவர் ஆலோசனையுடன், நன்கு யோகா கற்ற ஆசிரியரிடம் பயின்று, முறையாக யோகப் பயிற்சிகளை மேற்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை பெறுவது உறுதி.

உடல் பருமன்: உடலில் அளவுக்கு மீறி கொழுப்பு அதிகரிப்பதால், உடல் பருமனாகிறது. செயல்பாடு இன்றி இருப்பது, தவறான உணவு பழக்கம், தூக்க குறைபாடு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால், நாளடைவில் உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் போன்றவற்றுக்கும் காரணமாகிறது. எனவே, உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சிமோத்தாசனம், உஷ்ட்ராசனம், திரிகோணாசனம், பவனமுக்தாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம். ஹாலாசனம், மத்ஸ்யாசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் உடல் பருமனை குறைக்கும்.

நீரிழிவு நோய்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் இன்சுலின். கணையம் அதை போதுமான அளவு சுரக்காவிட்டாலோ, உற்பத்தியாகும் 5 இன்சுலினை உடல் பயன்படுத்த முடியவில்லை என்றாலோ, ரத்த சர்க்கரை அதிகரிக்கும். இதுவே சர்க்கரை நோய், நீரிழிவு நோய். உடல் பருமன், தவறான உணவு பழக்கம் மட்டுமின்றி, பரம்பரை ரீதியாகவும் நீரிழிவு பாதிப்பு வரக்கூடும். உத்தானபாதாசனம், மத்ஸ்யாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பரிவிருத்த திரிகோணாசனம், தனுராசனம், ஹாலாசனம், பச்சிமோத்தாசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும்.

முதுகுவலி: முதுகு தண்டுவடம் மற்றும் அதை ஒட்டியுள்ள எலும்புகள், மூட்டுகள், நரம்புகள், சதைகள் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகள்தான் பெரும்பாலும் முதுகு வலிக்கு காரணமாகின்றன. பித்தப்பை, கணையத்தில் ஏற்படும் பாதிப்புகளும் முதுகுவலியை ஏற்படுத்தக்கூடும். நிற்பது, நடப்பது. படுப்பது, வேலை செய்வது ஆகிய சூழல்களில் உடலை சரியான நிலையில் வைக்காமல் இருப்பது (Bad Posture) முதுகுவலியை ஏற்படுத்தும். சலபாசனம், புஜங்காசனம். திரிகோணாசனம், மர்ஜரியாசனம், உஷ்ட்ராசனம், மகராசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம் போன்ற ஆசனங்களை முறையாக செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம்.

தைராய்டு: மூளை, இதயம், தசைகள், இதர உறுப்புகள் சரியாக இயங்க தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. இதன் அளவு கூடினால், ஹைப்பர் தைராய்டு என்றும், குறைந்தால் ஹைப்போ தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஏற்ற இறக்க பாதிப்புகள் நாளடைவில் இதய துடிப்பு விகிதம், மூளை செயல்பாடு போன்றவற்றை பாதிக்கக்கூடும். தனுராசனம். சர்வாங்காசனம், ஹாலாசனம், சுப்த வஜ்ராசனம், புஜங்காசனம், மத்ஸ்யாசனம், உஷ்ட்ராசனம் போன்ற ஆசனங்களை செய்வது. தைராய்டு சுரப்பை சீராக வைத்திருக்க உதவும்.

கர்ப்பப்பை பாதிப்பு: கர்ப்பப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளால் நாளடைவில் கர்ப்பப்பை பெரிதாகி, ஹார்மோன் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் கோளாறுகள், முட்டை உற்பத்தி பாதிப்பு. இதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பின்மை, கருச்சிதைவு, குறை பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பத்தகோணாசனம், சுப்த பத்தகோணாசனம், பரத்வாஜாசனம், சக்கிசலனாசனம் போன்றவற்றை முறையாக செய்து வருவதால், கர்ப்பப்பை பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். உள்ளுறுப்புகளின் செயல்பாடும் மேம்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்