சென்னை: கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான் என்பது பழமொழி. பொருளாதாரத்தில் பின்தங்கியோர் கற்கவே தமிழகம் முழுவதும் அரசால் நூலகங்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் மாவட்ட மத்திய நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என பொது நூலக இயக்ககத்தின் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன.
இவை தவிர, சென்னை எழும்பூரில் கன்னிமாரா பொது நூலகம், கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் போன்ற பெரிய நூலகங்களும் இயங்குகின்றன. இவற்றில் பாரம்பரியமிக்க கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவில் உள்ள 6 தேசிய நூலகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. காலமாற்றத்துக்கு ஏற்ப டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று அச்சு நூல்களானது மின் நூல், ஒலி நூல்கள் வடிவிலும் வந்துகொண்டிருக்கின்றன.
நூலகத்தின் பயன்களை தங்கள் சந்ததியினரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வட சென்னை கொடுங்கையூர் எவரெடி நகரில் நூலகம் ஒன்றை அமைக்க அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் இடம் ஒதுக்கினர். அரசு சார்பில் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் 11 மாதங்கள் ஆகியும் இந்த கட்டிடம் திறக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எவரெடி நகர் மக்கள் பொதுநல சங்க செயலாளர் எஸ்.முருகப்பன் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் அண்ணாவைப் போன்று நூலகங்களால் பட்டறிவு பெற்று உயர்ந்தவர்கள் பலர். நூலகங்கள் சிறந்த மனிதர்களையும், தலைவர்களையும் உருவாக்குகிறது. மொழித் திறன், வாசிப்பு திறன், மொழிப்புலமை, பொது அறிவு போன்றவற்றை வளர்ப்பதில் நூலகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அங்கு பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் மட்டுமல்லாது, நாளிதழ்களும், வார இதழ்களும் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன.
» புதுச்சேரி அரசு குழந்தைகள் பள்ளிக்கு ஏசி வாங்கித் தந்த பெற்றோர்!
» ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ - அன்று புத்தகத் திருடன்... இன்று எழுத்தாளர் @ கேரளா
இப்பயன்களை, மாநகராட்சியின் 34-வது வார்டு, கொடுங்கையூர் எவரெடி காலனி மக்கள் பெறும் நோக்கில், யூனியன் கார்பைடு காலனி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் சார்பில் 2 ஆயிரத்து 556 சதுர அடி நிலத்தை நூலகம் அமைப்பதற்காக கடந்த 1975-ம் ஆண்டே ஒதுக்கியது. பின்னர் முறைப்படி அரசு பொது நூலகத் துறைக்கு கடந்த 2009-ம் ஆண்டு தானப்பத்திராக வழங்கியது.
இப்பகுதியில் 470 வீடுகளும், அவற்றில் 2 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். இவர்களுக்கும் நூலக சேவை கிடைப்பதற்காக நாங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்ததால் கடந்த 2022-ம் ஆண்டு நூலக கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 9 மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிந்து விட்டன. ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசுத் தரப்பிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நூலகத்தை விரைவாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பொது நூலகத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இக்கட்டிடத்தை கட்டும் பணி பொதுப்பணித் துறையிடம் வழங்கப்பட்டது. அவர்கள் முறையாக எங்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் உள்ளது. சிக்கல் தீர்க்கப்பட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
வாழ்வியல்
22 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago