அம்மா ரம்யாவை இழந்த குழந்தையும், சேர்ந்தே ‘கொல்லும்’ சமூக ஊடகமும்!

By பாரதி ஆனந்த்

‘What's on your mind..?’ என்று உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கும், நீங்கள் இழுத்துவிடும் படங்களுக்கும், வீடியோக்களுக்கும் ‘Write a caption’ என்று இஸ்டாகிராமும் அன்புடன் அழைப்பதால், எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலரும் மனசாட்சியின்படி குற்றவாளியாக்கப்பட வேண்டிய சம்பவத்தைப் பற்றியதே இந்தப் பதிவு.

பரந்து விரிந்த இந்த உலகத்தில் சுருங்கிக் கிடக்கும் சமூக ஊடகத்தின் ஊடுருவல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பிரபலங்கள், சாமான்யர்கள், குழந்தைகள் என அனைவரையும் ஒரு தீர்ப்புடனேயே அணுகுகிறது. இந்த ’ஜட்ஜ்மென்ட்டல் அப்ரோச்’-க்கு சமீபத்திய பலி ரம்யா. யார் ரம்யா? என்று எந்த விவரமும் தெரியாதவர்கள் ரம்யாவுக்கு இந்த சமூக ஊடகம் செய்ததை ஃபேஸ்புக்கில் தொழில்நுட்ப ஆலோசகர் ஹரிஹரசுசுதன் தங்கவேலுவின் பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம். அவரது பதிவு பின்வருமாறு:

‘முதல் தள பால்கனி அருகில் நின்று குழந்தைக்கு சோறூட்டியிருக்கிறார். அவரது கையிலிருந்து குழுந்தை வழுக்கிச் சென்ற சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து. இது போன்ற விசித்திர நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் ஒன்றாவது இருக்கும். இதில் குழுந்தை பத்திரமாக காப்பாற்றப்பட்டாலும் சமூகம் இவரை விடவில்லை. வீடியோ எடுத்துப் பரப்பியது.

அந்த அபார்ட்மென்ட் கிழவிகளை பேட்டி கண்டது. எந்த அம்மாவது இப்படிப் பண்ணுவாங்களா என நஞ்சு பாய்ச்சியது. இந்த அவதூறுகளால் குழந்தையின் தாய் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். ஆன்லைனில் உளவியல் சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். இத்தனையிலும், வீடியோவும் அவதூறுகளும் நிற்கவே இல்லை. இது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. குற்ற உணர்விற்கு தள்ளியிருக்கிறது.

இதிலிருந்து தப்பலாம் என குழந்தைகளுடன் சென்னையில் இருந்து காரமடைக்கு தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கும் இது தொடர, ஒரு பலவீனமான சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இப்போது இரு குழந்தைகளுக்கும் அம்மா என்றுமே இல்லை. என்ன கொடுமை. சமூக வலைதளங்களில் நாம் இடும் ஒற்றைக் கமெண்டுகள், முன்முடிவுகள் ஒருவரைக் கொல்லுமா என்றால் அதற்கு ரம்யாவின் மரணமே சாட்சி.

இது நாம் அனைவரும் சேர்ந்து நிகழ்த்திய கொலை. நம்மை நாமே செருப்பால் அடித்துக் கொண்டு சற்றேனும் திருந்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும் ரம்யா. We are sorry’ என்று முடிகிறது அந்தப் பதிவு.

ரம்யாவுக்கு ஆதரவாக, சமூக ஊடகங்களின் அத்துமீறல்களைக் கண்டித்து இதுபோன்ற சில பதிவுகளைக் காண முடிந்தாலும் பயன் என்ன? பால்கனியில் இருந்து தவறி விழுந்த 8 மாத பெண் குழந்தைக்கும், அதன் ஐந்து வயது அண்ணனுக்கும் என்ன ஆறுதல் கிடைத்துவிடப் போகிறது?

ஜட்ஜ்மென்ட்டல் அப்ரோச்: ஒரு பிரச்சினையின் ஆழம் அறியாமல் மேலோட்டமாக விஷயத்தை தெரிந்து கொண்டவுடனேயே துரிதமாக அதன் மீதான விமர்சனங்களை அதுவும் மதிப்பீடுகள் சார்ந்த விமர்சனங்களை முன்வைத்தலே ஜட்ஜ்மென்ட்டல் அப்ரோச் என்கிறது உளவியல். அன்றைய தினம் பல ஊடகங்களும் ஒளிபரப்பிய ஃபர்ஸ்ட் பிரேக்கிங்கில் சம்பவம் நடந்தது சென்னையின் ஒரு பகுதி என்பது மட்டுமே இருந்தது. நிகழ்விடத்தைக் கூட முழுமையாக உறுதி செய்ய முடியாத சூழலில் ஒளிபரப்பாகி வைரலான ஒரு சம்பவம் ஓர் உயிரைக் குடித்திருக்கிறது.

* பால்கனியிலிருந்து கைக்குழந்தை விழும் வரை அம்மா என்ன செய்துகொண்டிருந்தார்?
* குழந்தையை வளர்க்க முடியவில்லை என்றால் எதற்கு பெற்றுக் கொள்ள வேண்டும்.
* தனிக்குடித்தனம் எனப் போவது அப்புறம் பிள்ளைய இப்படி விட்ருவது...
* வேலை பார்க்கணும், சம்பாதிக்கணும், ஊர் சுத்தணும்.. அவ்ளோதான் இந்தக்கால பொண்ணுங்க

இவையெல்லாம் ரம்யா மீதான ஒரு துளி விமர்சனங்கள் மட்டுமே. இன்னொரு தரப்பு இருக்கு. இது ஒரு விபத்து எனக் கூறுவதோடு இல்லாமல் சமூகம் அப்படித்தான், 4 பேர் 4 விதமாகத்தான் பேசுவார்கள். நாம் தான் கடந்து செல்ல வேண்டும் என்று அட்வைஸ் சொல்வதற்கென்று. அவர்களும் வன்ம குடோன் வகையறாக்கள் தான். ரம்யாவை ஊர் விட்டு ஊர் சென்றாலும் விடாமல் துரத்தியுள்ளது விமர்சனங்கள்.

குழந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் போஸ்ட் பார்டம் டிப்ரஸன் என்ற ஒருவித உளவியல் அழுத்தத்துக்கு ஆளாவார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். உடலும், மனமும் சோர்ந்துள்ள போது குழந்தை பராமரிப்பு மிகப் பெரிய சுமையாகவே இருக்கும். ஆனாலும், அதைப் பற்றி பெரிய புலம்பல்கள் இல்லாமல் மீண்டெழும் திறன் கொண்டவர்கள் பெண்கள். அப்படி மீண்டு வந்திருக்க வேண்டிய ரம்யாவை குழந்தையை தவறவிட்ட காரணத்துகாகவே சேர்ந்தே கொன்றிருக்கிறது இந்த சமூக ஊடகம்.

யார் வீட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால் அதன் மீது நாம் ஏற்கெனவே தயாராக வைத்திருக்கும் டெம்ப்ளேட் தீர்ப்புகளைத் தூக்கி எறியாமல் இருப்போமாக.

சைந்தவி - ஜிவி பிரகாஷ் பிரிந்தால்தான் என்ன? ரம்யாவோ அல்லது அவரது குழந்தை கையிலோ இருந்து குழந்தை நழுவினால் தான் என்ன? அவரவர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை எதிர்கொள்ள, கடந்து செல்ல அவரவருகென்று திராணி இருக்கும். உதவிக்கரம் நீட்ட வாய்ப்பிருந்தால் உதவலாம். இல்லாவிட்டால் கருத்து சொல்லாமல் கடந்து செல்லலாம்.

ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், மன்னிப்பைவிட மிகப் பெரிய பலம் கொண்டது மனம் திருந்துவது. திருந்திக் கொள்ளட்டும் இச்சமூக ஊடகவாசிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE