கோடையிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்: தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் சுவாரஸ்ய தகவல்

By சி.கண்ணன்

சென்னை: கோடை வெப்பத்தால் நாம் பல்வேறு உபாதைகளையும் சங்கடங்களையும் அனுபவித்து வருகிறோம். அவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் இருக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே விளக்குகிறார் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) இயக்குநர் சித்த மருத்துவர் ஆர்.மீனாகுமாரி.

பானகம்: எலுமிச்சை பழச்சாற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிதளவு புளி, சுக்கு, ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வெப்ப காலத்தில் உண்டாகும் அதிக தாகத்தை போக்கி, உப்புச்சத்துக்களை சமன்படுத்தி நீரிழப்பை தடுக்கும்.

பழையசோறு: வடித்த சோற்றில் இரவு நீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை அதனுடன் சிறிது மோர், சின்னவெங்காயம் சேர்த்து உண்பதே நம் முன்னோர்கள் காட்டிய சிறந்த வழக்கமாகும். இதில், குடலுக்கு நன்மைபயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்தை சீர்செய்வதோடு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடலின் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

கஞ்சிகள்: பொதுவாகவே கோடைகாலத்தில் பசித்தன்மை குறைந்து காணப்படும். அதனால், இத்தகைய காலகட்டத்தில் சிறியவர் முதல் முதியவர் வரை உண்ணத் தகுந்த உணவு கஞ்சியாகும். ஏனெனில், கஞ்சியானது குடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு விரைவில் செரிக்கும் தன்மையும், நீரிழப்பை தடுக்கும் தன்மையும் கொண்டது. இது உடலுக்கு தேவைப்படுகின்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும்.

நவரை அரிசியை தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைத்து பின் சிறிதளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து அருந்தலாம். பச்சைப்பயிறு, கோதுமை, கொள்ளு, கருப்பு உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசி, எள்ளு, மொச்சை சம அளவு எடுத்து பொடி செய்து நீரிலிட்டு வேக வைத்து பின் சிறிதளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து கஞ்சியாக அருந்தலாம். கருப்பு உளுந்தை நன்கு வேகவைத்து தேவையான அளவு தேங்காய் பால், ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்து கஞ்சியாக செய்து அருந்தலாம்.

பூண்டுக் கஞ்சி: அரிசியுடன் சிறிதளவு பூண்டு, திப்பிலி, வெந்தயம், சீரகம், சுக்கு சேர்த்து நன்கு வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கி பின் தேவையான அளவு பால் சேர்த்து கஞ்சியாக அருந்தலாம்.

கூழ்: கூழானது குடலுக்கு நன்மை பயக்கும் நுண்கிருமிகளை நன்னிலைப்படுத்தி குடற்புண், கழிச்சல், செரியாமை போன்ற உபாதைகள் உண்டாகாமல் தடுக்கிறது. கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு நீர் சேர்த்து ஒரு நாள் இரவு புளிக்க வைத்து பின் கூழாக காய்ச்சி தேவையான அளவு மோர். சின்ன வெங்காயம் சேர்த்து கரைத்து பருகலாம்.

இது உடலுக்கு ஊட்டத்தை தருவதோடு, வெப்பத்தால் உண்டாகும் வயிற்றுக் கோளாறுகளான வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்கும். இம்முறையே, கம்பையும் கூழ் செய்து பருகினால், கோடைகாலத்தில் உண்டாகும் வேர்குரு, சிரங்கு போன்றவற்றை சரிசெய்வதோடு, உடலின் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சி அடைய செய்யும்.

கீரைகள்: கீரைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எளிதில் மலத்தை வெளியேற்றுகிறது. விட்டமின் சத்துக்களும் கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புச்சத்துக்களும் மிகுந்து காணப்படுவதால் வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படுகின்ற கோளாறுகளான வாய்ப்புண், குடற்புண், செரியாமை, மலக்கட்டு, மூலம், ஆசனவாய் வெடிப்பு போன்றவை ஏற்படாமல் தடுத்து உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

மணத்தக்காளி கீரையுடன் பருப்பு, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து வேகவைத்து நெய் சேர்த்து தாளித்து உண்ணலாம். அதேபோல், பருப்புக்கீரை, முளைக்கீரை, பசலைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றையும் கூட்டாக செய்து உண்ணலாம். பசலைக்கீரையினால் நீரெரிச்சல், நீர்க்கடுப்பு போன்ற சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சிறுகீரையினால் நோய்எதிர்ப்புசக்தி அதிகரிப்பதோடு உடலின் உஷ்ணம் குறைந்து சிறுநீர் நன்றாக வெளியாகும். பருப்புக்கீரையினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாவதோடு, குடல் நோய்கள் குணமாகும். பொன்னாங்கண்ணிக்கீரை, சூட்டால் உண்டாகும் கண் எரிச்சலை போக்கி, கண்களுக்கு குளிர்ச்சியை தரும்.

பழங்கள்: தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் நீர் சத்தும் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்திருப்பதால் உடலின் நீரின் அளவை குறையாமல் தடுப்பதோடு, குடல் சீராக இயங்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்து, சிறுநீர் கற்கள் உண்டாகாமல் தடுக்கிறது. சூரிய வெப்பத்தால் தோல் சேதப்படாமல் பாதுகாக்கிறது. முலாம்பழம், சாத்துக்குடி, வெள்ளரிப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், தர்பூசணி முதலியவை கோடை காலத்துக்கு உரிய பழங்களாகும்.

இப்பழங்களை பழமாகவோ, பழச்சாறாகவோ அருந்தினால் உடலில் நீரின் அளவு சமன்படுவதோடு, பெருங்குடல் சீராக இயங்க உதவுகிறது. முலாம்பழத்தினால் அதிக தாகம் தணியும், நீரெரிச்சல் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை படுதலுக்கு சிறந்தது. வெள்ளரிப்பழத்தினால் உடல் வெப்பம் குறையும், நாவறட்சி நீங்கும். எலுமிச்சை பழத்தினால் வெப்பத்தினால் உடலில் அதிகரித்த பித்தம் தணியும்.

நீர்மோர்: இது கோடை காலத்துக்கான இதமான பானமாகும். தயிரில் இருந்து வெண்ணெயை கடைந்து எடுத்த பின்னர் மீதமுள்ள நீரே மோராகும். இதில் நீர் சத்துக்களும், உப்பு சத்துக்களும் நிறைந்துள்ளதால் அதிதாகத்தைப் போக்கி உடல் வறட்சியைத் தடுப்பதோடு வெப்பத்தால் உண்டாகும் நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் போன்ற சிறுநீர் நோய்களை போக்குகிறது. குடலுக்கு நன்மை பயக்கின்ற பாக்டீரியாக்கள் இதில் நிறைந்துள்ளதால் செரிமானத்தை சீர் செய்து குடலை பலப்படுத்துவதோடு, வயிற்று வலி, வயிற்றுப்புண் முதலியவற்றை குணப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

காய்கறிகள்: வெள்ளைப்பூசணியில் அதிகளவு நீர்சத்து இருப்பதோடு, விட்டமின் பி மற்றும் சி, கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம், போன்ற தாதுஉப்புக்கள் மிகுந்துள்ளதால், உடலின் வெப்பத்தை குறைத்து, நீரிழப்பை தடுத்து, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் போன்ற சிறுநீர் கோளாறுகளையும் சீர்செய்வதோடு, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதலையும் குணமாக்குகிறது. வெள்ளரிப் பிஞ்சினை, மிளகு மற்றும் மோர் சேர்த்து பச்சடியாக செய்து உண்பதால், உடலின் உஷ்ணத்தை குறைத்து, நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை காக்கிறது. சுரைக்காயினை கூட்டாக உண்பதால், ரத்தஅழுத்தம் சீராவதோடு இருதயத்துக்கு நல்ல பலத்தை தரும்.

இவ்வாறு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) இயக்குநர் சித்த மருத்துவர் ஆர்.மீனாகுமாரி பல்வேறு குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE