கோடையில் ஒருநாள் குளிர் வரலாம்... கூடவே இரண்டு வானவில்லும்!

By தங்க விக்னேஷ்

வானவில் வளைக்காத மனங்கள் உண்டோ! அதன் வண்ண வீச்சு அவ்வளவு அழுத்தமானதாயிற்றே! பார்த்தவுடன் பரவசத்தைப் பாய்ச்சும் வானவில்லை ஒவ்வொருமுறையும் குழந்தையின் மனம் கொண்டே பார்போர் தான் அதிகம். ஒற்றை வானவில்லையே அப்படி உற்று உற்று பார்க்கும் கண்களுக்கு ‘டபுள் பொனான்சா’ போல் இரட்டை வானவில் காணக் கிடைத்தால் எப்படியிருக்கும்!

அதுவும் கொளுத்தும் கோடையில் திடீரென பெய்த மழையின் ஊடே அந்தக் காட்சி ‘சட்டென மாறுது மனநிலை’ என்று சொல்லும் அளவுக்கு காதலையும், கவிதையையும் கொண்டுவரும்தானே. எங்கோ தூரத்தில் இருக்கும் உறவை நினைத்துக் கொள்ளத் தூண்டும் விதத்தில் ‘கோடையில் ஒருநாள் குளிர் வரலாம்... கூடவே இரண்டு வானவில்லும் வரலாம்!’ என்று ரசனை கொள்ள வைத்தது அந்த இரட்டை வானவில்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே கோடை மழை என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரட்டை வானவில் என்னைப் போன்ற சென்னை வாகன ஓட்டிகள் முகத்தில் புன்னகையை மலரச் செய்துவிட்டுச் சென்றது.

இந்த ஆண்டு இந்தியாவில் கோடை காலம் தொடங்கும் முன்பே புழுக்கம் ஆரம்பித்துவிட்டது. குளிர்காலம் குறுகிய காலமே நிலவியதால் புழுக்கத்தோடு ஆரம்பித்த பிப்ரவரி இறுதியானது நாட்கள் செல்லச் செல்ல கோர கோடையாக மாறியது. மார்ச் பாதியிலேயே இந்த வெப்பம் என்னவெல்லாம் செய்யுமோ என்ற பீதி ஏற்பட்டது. நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருந்தது. தமிழகத்தில் கூட வழக்கத்துக்கு மாறாக கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியது.

தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் வெயிலின் தாக்கத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான 3வது நகரமாக ஈரோடு செய்திகளில் இடம் பிடித்தது.

கோடை வெயிலால் இயல்பு வாழ்க்கை முடங்க அரசு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல் கோடை வெபத்தை சமாளிக்க ஆலோசனைக் கூட்டங்களை எல்லாம் முன்னெடுத்தது. அதன் நீட்சியாக முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெப்ப அலை பாதிப்புக்கு என தனிப் பிரிவு அமைக்கப்பட்டன. கடும் கோடை எகிற எகிற மக்களிடையே ஒருவித அச்சமும் ஏற்பட்டது. வட இந்தியா, மேற்கு இந்தியா போல் வெப்ப அலை உயிரிழப்புகள் கூட ஏற்படுமோ என்ற பயத்துக்கு மக்கள் ஆளாகினர்.

இதனிடையேதான், கோடை வெயில் உச்சமாக கூறப்படும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஒருவித கலக்கத்துடன் இருந்த பொதுமக்களை கோடை மழை ஆறுதல் கொடுத்தது. அக்னி வெயிலுக்கு பயந்தவர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.

எல்லா ஊரிலும் மழை பெய்கிறதே! இங்கும் மழை தருமோ மேகம்! என ஏங்கிய சென்னைவாசிகளை குளிர்விக்க இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 6:30 மணி முதல் நகரின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. கூடவே இரட்டை வானவில்லும் வந்தது.

நகர வாழ்வில் இருக்கும் மக்களுக்கு கத்திரி வெயிலுக்கு நடுவே மழை பெய்வது ஒரு மகிழ்ச்சி என்றால், அவர்களின் முகத்தில் புன்சிரிப்பை கொண்டு வந்தது இரட்டை வானவில், குதிரைக்கு கடிவாலம் கட்டிய வாழ்க்கைக்கு இடையே பரந்து விரிந்த வானத்தை அன்னாந்து பார்க்க வைத்தது இந்த இரட்டை வானவில்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE