ட்வீட்டில் ‘கொத்தமல்லி’ இலவசமாக கேட்ட பயனரின் அம்மா: ஓகே சொன்ன Blinkit சிஇஓ

By செய்திப்பிரிவு

மும்பை: முன்பெல்லாம் நம் ஊரில் காய்கறி வாங்க சென்றால் கடைக்காரருடன் பேரம் பேசி விலையை குறைத்து, கூடவே ஒரு கை கொத்தமல்லி தழையும் காசு கொடுக்காமல் பலரும் வாங்கி வந்திருப்போம். தற்போது அந்த நிலை சற்றே மாறி உள்ளது. குறைந்தது 10 ரூபாய் கொடுத்தால் தான் கொத்தமல்லி தருகிறார் கடைக்காறார்.

இந்தச் சூழலில் ஆன்லைன் டெலிவரி நிறுவனமான Blinkit நிறுவனத்தின் செயல் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. மளிகை, காய்கறி என வீட்டுக்கு தேவையான பலசரக்கு சாமான்களை இந்த நிறுவனத்தின் மொபைல் செயலியில் ஆர்டர் செய்யலாம். அதை சில நிமிடங்களில் வீட்டுக்கே நேரடியாக டெலிவரியும் பெற்றுக் கொள்ளலாம்.

சுமார் 30+ நகரங்களில் இந்த நிறுவனம் தனது சேவையை வழங்கி வருகிறது. தினந்தோறும் லட்ச கணக்கான ஆர்டர்களை கையாண்டு வருகிறது. இந்தச் சூழலில் மும்பையைச் சேர்ந்த எக்ஸ் தள பயனர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அதில் கொத்தமல்லிக்கு காசு கொடுக்க வேண்டி உள்ளதை பார்த்து தனது அம்மா அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த ட்வீட் Blinkit சிஇஓ அல்பிந்தர் கவனத்துக்கும் சென்றது. அதற்கு அவர் ரிப்ளையும் கொடுத்தார். அது பயனர்களை மனதில் மணத்தை பரப்பியுள்ளது. ஏனெனில், நம் வீட்டுச் சமையலில் தவறாமல் கொத்தமல்லி இடம்பெறும் என்பதே.

பயனரின் ட்வீட்: “Blinkit-ல் கொத்தமல்லிக்கு காசு கொடுக்க வேண்டும் என்பதைப் பார்த்து அம்மாவுக்கு லேசாக நெஞ்சு வலி வந்து விட்டது. குறிப்பிட்ட தொகைக்கு காய்கறி வாங்கும் பயனர்களுக்கு இலவசமாக கொத்தமல்லி தரலாம் என அம்மா யோசனை சொல்கிறார்” என அங்கித் சாவந்த் என்ற பயனர் தனது பதிவில் தெரிவித்தார். அதில் சிஇஓ அல்பிந்தரையும் டேக் செய்திருந்தார்.

சிஇஓ அல்பிந்தர் ரிப்ளை: ‘அதை செய்வோம்' என முதலில் ட்வீட் செய்திருந்தார். “இப்போது இது லைவில் உள்ளது. அனைவரும் அங்கித் அவர்களின் அம்மாவுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்த சில நாட்களில் இந்த அம்சத்தை மேம்படுத்துவோம்” என அடுத்த பதிவில் அவர் சொல்லி இருந்தார். அந்த நிறுவனம் பயனர்களுக்கு காம்ப்ளிமென்டாக கொத்தமல்லியை வழங்க தொடங்கியிருக்கிறது.

இது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றது. லட்சக் கணக்கான வியூஸ், ஆயிரக் கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக் கணக்கான ரிப்ளைகளை அந்த ட்வீட் பெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE