பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக விருதுநகரில் தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: மாரியம்மன் கோயில்களில் நடை பெறும் பங்குனி பொங்கல் திரு விழாக்களுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகள் தயாரிப்பு பணி விருதுநகரில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் பங்குனி மாதத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம்.

கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக மஞ்சள் நீராடுதல், மஞ்சள் கிழங்கு வைத்து காப்புக் கட்டுதல், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் வீட்டில் வேப்பிலை வைத்தல் போன்ற சம்பிரதாயங்களுடன் அம்மன் கோயில் களில் திருவிழாக்கள் நடைபெறும்.

திருவிழாவின்போது பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

மேலும் பலர் உடல் நலம் பெற வேண்டியும், திருமணம், குழந்தை பேறு வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும், வேலை வேண்டியும், புதிதாக வீடு கட்டுவதற்கும், வெளிநாட்டு வேலைக்குச் செல்லவும் வேண்டிக்கொண்டு பொம்மைகள் வாங்கி வைத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.

இதையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் மண் பொம்மைகள் தயாரிக்கும் பணி விருதுநகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொம்மைகள் தயாரிக்கும் மையிட்டான்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் (56) கூறியதாவது: விருதுநகர், சிவகாசி, ராஜ பாளையம், திருத்தங்கல், இருக் கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் விழாவுக்காக மண் பொம்மைகளை தயாரித்து வருகிறோம்.

இதற்காக தை, மாசி, பங்குனி மாதங்களில் விரதம் இருந்து பணியை மேற்கொள்கிறோம். களிமண், செம்மண், கரிசல் மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்து பொம்மைகளை தயாரிக் கிறோம்.

ஆண் உருவம், பெண் உருவம், தொட்டில் குழந்தை, தாய்-சேய் பொம்மைகள், திரு மணம் நடைபெற வேண்டுதல் வைப்போருக்கு ஜோடி செட் பொம்மை, குடும்ப ஒற்றுமைக்காக குடும்ப பொம்மை செட், உடல் நலத்துக்காக கால் பாதம், கை, ஆயிரம் கண் பானை, அக்னி சட்டி, வீடு பொம்மை, தவழும் குழந்தை பொம்மை, கார் பொம்மை மற்றும் வெளிநாடு செல்ல வேண்டுதல் நிறைவேற விமான பொம்மை, ஆடு, பசு, காளை போன்ற பொம்மைகளை தயாரிக்கிறோம். இவை ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்கிறோம்.

விலை கொடுத்து மண் வாங்குவதாலும், வண்ணங் களுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் இந்த ஆண்டு ரூ.10 உயர்த்தி யுள்ளோம். பக்தர்களுக்குச் செய்யும் சேவையாகக் கருதி கடந்த 46 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE