ஓசூரிலிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கருவேப்பிலை - அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூரிலிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கருவேப்பிலையை, உள்ளூரில் அதிகளவில் சாகுபடி செய்ய விவசாயிகளை வேளாண்மை துறையினர் ஊக்கப்படுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த சீதோசன நிலை மற்றும் நல்ல மண்வளம் உள்ளதால், இப்பகுதியில் ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்வதைப் போன்று, அனைத்து வகையான காய்கறிகள், கீரை வகைகள், புதினா, கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஓசூர் பகுதியில் விளையும் ரோஜா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைப் போன்று, பாவக்காய், பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பெங்களூருவில் உள்ள வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, அதனை சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு உள்ளூரில் காய்கறிகளுக்கு விலை கிடைக்கவில்லை என்றாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால், இழப்பு ஏற்படுவதில்லை. இந்நிலையில் மலர்கள் மற்றும் காய்கறிகளைப் போன்று தற்போது ஓசூர் பகுதியிலிருந்து கருவேப்பிலைகள் துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அரபு நாடுகளில் கருவேப்பிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், ஓசூரிலிருந்து ஏற்றுமதியாளர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 500 கிலோ கருவேப்பிலையை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இது குறித்து ஏற்றுமதியாளர்கள் கூறும்போது, "ஓசூரிலிருந்து ரோஜா மற்றும் காய்கறிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போன்று தற்போது கருவேப்பிலையும் துபாய், கத்தார் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓசூர் பகுதியில் போதிய கருவேப்பிலை விளைச்சல் இல்லாததால், ஆந்திரா, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோ ரூ.18க்கு விலை கொடுத்து வாங்கி வந்து, 50 கிராம் கருவேப்பிலையை கவரில் அடைத்து, அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விமானம் மூலம் ஏற்றுமதி செய்கிறோம்.

அரபு நாடுகளில் தமிழர்கள் மற்றும் கேரளா மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கருவேப்பிலை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் கருவேப்பிலைக்கு வரவேற்பு உள்ளதால், வறட்சியை தாங்கி வளரக்கூடிய இந்த பயிரை ஓசூர் பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறையினர் ஊக்கப்படுத்த வேண்டும்.

இதனால் வெளியூர்களிலிருந்து வாங்காமல் உள்ளூரில் வாங்குவதால், தங்களுக்கு போக்குவரத்து செலவு குறையும். உள்ளூர் விவசாயிகளிடமிருந்து அதே விலைக்கு வாங்குவோம். இதனால் எங்களுக்கும் லாபம் கிடைக்கும், விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும். அதே போல் கருவேப்பிலை ஏற்றுமதி செய்யும் பணியில் 30 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது'' என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்