2000 ஆண்டுகளாக கல்வெட்டுகளில் பெண்களின் சரித்திரம் | மகளிர் தினம் ஸ்பெஷல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பண்டைய காலங்களில் தகவல்கள், செய்திகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இது தற்போது காலத்தின் கண்ணாடியாக தமிழர் வரலாற்றை இக்கால தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுகின்றன. இக்கல்வெட்டு தகவல்களை வைத்தே தமிழக வரலாறும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மலைக் குகைகளிலும், சங்ககால நடுகற்களிலும் மற்றும் 95 சதவீத கல்வெட்டுகள் கோயில் சுவர்களின் மீதும் செதுக்கப் பட்டுள்ளன. கல்வெட்டுகளில் ஆண்களின் சாதனைகள் மட்டும் பொறிக்கப்படவில்லை, பெண்களின் பங்களிப்பும் பெருமளவில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழர் வரலாற்றில் இடம்பெற்றிருந்த சரித்திரப் பெண்கள் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த கோயில் கட்டடக்கலை, சிற்பக் கலை ஆய்வாளர் ப.தேவி அறிவு செல்வம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கல்வெட்டில் பெரும்பாலும் அன்றாடச் செய்திகளான தானம் கொடுத்தது மற்றும் கோயில் வழிபாடு தொடர்பான செய்திகளாகவே உள்ளன. இவற்றில் பெண்களின் பங்கும் இருந்துள்ளதை சில கல்வெட்டுகள் வழி தெரிந்துகொள்ள முடிகிறது.

கல்வெட்டுகளில் பெண்கள் கொடை அளிக்கும்போது, அவர் களது பெயர்கள் நேரடியாகவோ அல்லது அப்பெண்ணின் கணவர் சகோதரர், தந்தை அளித்ததாகவோ உள்ளன.

கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில், மதுரை கிடாரிப்பட்டி கல்வெட்டு சபமிதா என்ற பெண் குகை அல்லது சுனை அமைத்து கொடுத்த கொடையை தெரிவிக்கிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் கல்வெட்டில், பாண்டிய மன்னரின் தளபதி சாத்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி துர்க்கைக்கும் ஜேஷ்டா தேவிக்கும் குடவரை கோயில் எடுத்ததை குறிப்பிடுகிறது.

கி.பி.10-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் குணவூர் அய்யன் மணக்காடு உடையான் அக்காள் வீரபாண்டிய வீணை மாராயன் மணவாட்டி கொம்மனசுவாமிக்கு தானம் கொடுத்ததை காட்டுகிறது. கி.பி.11-ல் மதுரை மதனகோபால சுவாமி கோயில் கல்வெட்டு வழியே மன்னரின் மனைவி உலகம் முழுதுடையாள் நில தானம் கொடுத்த செய்தியும் தெரிய வருகிறது.

திருவாதவூர் கல்வெட்டில் கூத்தாண்டாள் மகள் அழகிய நாச்சி தாயாண்டாள் என்பவர் இக்கோயிலுக்கு இறையியாக நிலம் கொடுத்ததும், தேவரடியார் குழைஞ்சாள் அர ஆலால சுந்தரநங்கை என்பவர் சந்திரசேகர், கவுரி ஆகியோருக்கு செப்பு திருமேனி செய்வித்து திருவீதி எழுந்தருளச் செய்துள்ள செய்தியும், 19-ம் நூற்றாண்டில் பரவை பாரி இருளாளி அம்மாள் என்பவர் திருவாதவூர் கோயில் உள்ளே பிரகார கல் தரைகளை செய்து கொடுத்த செய்தியும் கல்வெட்டு வழி தெரிய வருகிறது.

அழகர்கோயில் கல்வெட்டில் சுந்தர பாண்டிய மன்னரின் மனைவி திருவுடையாள் என்பவர் திருநொந்த விளக்கும், அவ்விளக்கு எரிப்பதற்கு நிலதானமும் விளக்குபுறம் என்ற பெயரில் தந்துள்ளார். கி.பி.13-ம் நூற்றாண்டில் ஆனையூர் கோயிலில் தேவரடியார் உய்யவந்தாள் என்பவர் திருகுறுமுள்ளூரில் உள்ள திருவக்னீசுவரனுடைய நாயனார் கோயிலுக்கு எட்டுமா நிலம் வழங்கியுள்ளார். தேவரடியார் பூண்டாள் சோலை இக்கோயிலுக்கு வெண்கல திருவடி நிலை வழங்கியுள்ளார்.

கி.பி.1891-ல் திருப்பைங்ஞலி கோயிலுக்கு திருவிழா நடத்துவதற்காக இலுப்பை தோப்பை அருணாச்சலம் மனைவி காமாட்சியம்மாள் வழங்கி உள்ளார். கி.பி.20-ம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றம் பாண்டி மண்டல சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு மடம் அமைப்பதற்காக சாரதாம்மாள், அழகம்மாள் மற்றும் சரஸ்வதியம்மாள் நில தானம் கொடுத்து பராமரித்து வந்துள்ளனர்.

இவ்வாறு 2000 ஆண்டுகளாக பெண்கள் தானம் கொடுக்கும் அளவுக்கு சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை கல்வெட்டு வழி தெரிந்து கொள்ளமுடிகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE