உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!

By எல்.ரேணுகா தேவி

 

மெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்திவருகிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முக்கியமான முப்பது இளைஞர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ‘முப்பது வயதுக்குள் முப்பது பேர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் இடம் பிடித்த இளைஞர்களில் சிலரைப் பார்ப்போம்.

வலைத்தள முகம்

ஃபேஸ்புக் பயன்படுத்தும் இளைஞர் மத்தியில் பிரபலமானவர், டெல்லியைச் சார்ந்த மிதிலா பால்கர் (24). இவர் முதன் முதலில் யூடியூப் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த ‘Cup song’ என்ற வீடியோ பிரபலமானது.

அதேபோல் மிதிலா முக்கிய கதாபாத்திரமாக நடித்த ‘Girl in the City’ என்ற வலைத்தொடர் புகழ்பெற்றது. இவரது இயல்பான நடிப்பு இவருக்குத் தனிச் சிறப்பைத் தேடிக்கொடுத்திருக்கிறது. தற்போது பல முன்னணி விளம்பரங்களிலும் இந்தித் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் மிதிலா.

விண்வெளி ஆராய்ச்சி

ரோகன் எம். கணபதி (25), யஷஸ் கரணம் (23) ஆகியோர் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள். இவர்களில் ரோகன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கோவை. இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். கடந்த 2011-ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக இவர் எழுதி அனுப்பிய ஆய்வுக் கட்டுரை தனித்து அடையாளம் காட்டியது.

தொடர்ச்சியாகச் செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ரோகனுக்கு அமெரிக்காவின் பிரபல ஐ.வி. லீக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மைசூருவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மின்னியல் பொறியியல் படித்த யஷஸ் கரணம் ராக்கெட் தொடர்பான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். இருவரும் சேர்ந்து ‘பெல்லட்ரிக்ஸ் ஏரோஸ் பேஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இவர்களின் தொடர் ஆராய்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் ஏற்கப்பட்டது. அடுத்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ள ராக்கெட்டில் இவர்களின் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட உள்ளது.

ஹாக்கி ராணி

சவிதா பூனியா (27), இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர். இவரது லாகவமான கோல் தடுப்பு, கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய மகளிர் ஹாக்கி கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தது.

16CHLRDSAVITHA-copy

இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடத் தேர்வானதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவரும் இவர்தான். ஹரியாணாவைச் சேர்ந்த இவர், “பெண்கள் குறித்து மிகவும் பிற்போக்குக் கருத்துகளைக் கொண்ட ஹரியாணாவில் என்னைப் போன்ற ஹாக்கி வீராங்கனைகள் உருவாவது மிகவும் சவாலான விஷயம்” என்று குறிப்பிடுகிறார்.

பூக்களின் வாசம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அங்கித் அகர்வால் (28), கரண் ரஸ்தோகி (29) ஆகிய இருவரும், கோயில்களில் பூஜை முடிந்த பின் வீணாகும் பூக்களைக்கொண்டு சோப்பு, ஊதுபத்தி, உரம் ஆகியவற்றைத் தயாரித்துவருகிறார்கள்.

பிரபல தனியார் நிறுவனத்தில் பார்த்துவந்த ‘சைபர் செக்யூரிட்டி’ வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோயில்களைச் சுத்தப்படுத்தப் போவதாக அகர்வால் கூறியபோது அவரின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனால், மற்றவர்களின் கேலியைக் காதில் வாங்காமல், அந்தப் பணியைத் தன்னுடைய நண்பரான கரண் ரஸ்தோகியுடன் இணைந்து அங்கித் அகர்வால் தொடங்கினார்.

இதற்காக 72 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘ஹெல்ப் அஸ் கீரின்’ என்ற நிறுவனம் இரண்டே ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. வீணாகும் பூக்களை வைத்து லாபகரமான தொழில் நடத்தும் இந்த வெற்றி ஜோடியின் ஐடியாவுக்கு வலுச்சேர்க்கும் விதமாகப் பல்வேறு நிறுவனங்கள் 4.2 கோடி ரூபாயைப் பூக்கள் வளர்ப்பதற்காக வழங்கியுள்ளன. இந்த நிதியைக் கொண்டு அங்கித் அகர்வால், கரண் ரஸ்தோகியும் வாரணாசி, மதுரா ஆகிய இடங்களில் பூக்கள் பயிரிடும் மையத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

குறைந்த செலவில் காற்று

வீடுகளில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது மின்விசிறி. மின்விசிறிகளால் அதிக மின்சாரம் செலவாவதால், ஒவ்வொரு மாதமும் மின்கட்டண உயர்வைச் சமாளிக்க முடியாமல் பலரும் திண்டாடுகிறார்கள். இதற்காக, குறைவான மின்சாரத்தில் இயங்கும் புதுமையான மின்விசிறியைக் கண்டுபிடித்தார் மனோஜ் மீனா (29).

பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்விசிறி இண்டக்ஷன் மோட்டாரால் இயக்கப்படுகிறது. இந்த மோட்டார் இயங்க 70 வாட்ஸ் மின்சாரம் தேவை. ஆனால், மனோஜ் மீனா கண்டுபிடித்த கொரில்லா மின்விசிறி (Gorilla fan) ‘நேர்த்திசை’ மின்சார மோட்டாரால் இயங்க வெறும் 28 வாட்ஸ் மின்சாரமே போதும்.

இதற்காக மனோஜ் தன்னுடைய நண்பர் சிபப்ரதா தாஸுடன் (27) இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் சார்பில் தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் கொரில்லா மின்விசிறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் தேவையில்லை

உயர்ந்துகொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் திண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த தருண் மேத்தா (28), ஸ்வப்நில் ஜெயின் (28) ஆகியோர் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளனர்.

ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 70 - 80 கிலோ மீட்டர் தூரம் இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்ய முடியும். தருண் மேத்தா, ஜெயின் இருவரும் இணைந்து சொந்தமாக ‘அதர்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

12 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

மேலும்