“அறிவு மட்டும் போதாது... ஞானமும் வேண்டும்!” - புத்தக வெளியீட்டு விழாவில் தலைமை நீதிபதி பேச்சு

By கி.மகாராஜன் 


மதுரை: ‘அறிவு மட்டும் இருந்தால் போதாது, ஞானமும் இருக்க வேண்டும். அறிவு பிரச்சினையை தீர்க்கும், ஞானம் பிரச்சினை வராமல் தடுக்கும்’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பேசினார்.

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.இப்ராகிம்கலிபுல்லா எழுதிய புத்தகம், ‘சட்டத்தின் பீடு நடை- முன் செல்லும் அதன் பாதை’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி பெயர்ப்பு புத்தக வெளியீட்டு விழா விழா உயர் நீதிமன்ற கிளையில் எம்எம்பிஏ சார்பில் இன்று நடைபெற்றது. எம்எம்பிஏ தலைவர் ஜெ.அழகுராம்ஜோதி வரவேற்றார்.

புத்தகத்தை வெளியிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பேசியது: "புத்தகங்களை தாய் மொழியில் படிப்பது சிறப்பானது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் மொழி பெயர்ப்பு புத்தகத்தை வெளியிடுவது கூடுதல் சிறப்பு. இளைஞர்கள் அதிகளவில் படிப்பதற்காக புத்தகத்தை இ-புத்தகமாகவும் கொண்டு வர வேண்டும்.

நீதிபதி இப்ராகிம்கலிபுல்லாவின் புத்தகம் அறிவு மற்றும் ஞானத்தை தரும். அறிவு மட்டும் இருந்தால் போதாது. ஞானமும் இருக்க வேண்டும். அறிவு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்கும். ஆனால் ஞானம் பிரச்சினை வராமல் தடுக்கும். புத்தகத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு உதவியாக இருக்கும். இளைஞர்களின் நல்ல நன்பனாக புத்தகம் இருக்க முடியும்" என்றார்.

நீதிபதி இப்ராகிம்கலிபுலா தனது ஏற்புரையில், "புத்தகம் இ-புத்தகமாகவும் கொண்டுவரப்டும். இளம் வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வாறு உறுதுணையாக இருக்கும் போது மதிப்பும், மரியாதை எப்போதும் காப்பாற்றப்படும்" என்றார்.

உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா ஆகியோர் பேசினர். புத்தக வெளியீட்டாளர் ஷாஜகான், மொழி பெயர்ப்பாளர் சம்பத் ஸ்ரீனிவாசன் கவுரவிக்கப்பட்டனர். எம்எம்பிஏ பொதுச் செயலாளர் ஆயிரம் கே.செல்வகுமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE