‘தோல்வியில் பாடம் கற்று வெற்றியை நோக்கி முன்னேறுங்கள்’ - ஐஏஎஸ் அதிகாரி சோனல் சொந்த கதையை கூறி அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியாணாவின் பானிபட் பகுதியை சேர்ந்தவர் சோனல் கோயல். டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் சேர்ந்தார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். ஆனால், அவரது பெற்றோர் விரும்பவில்லை.

பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பில் சோனல் சேர்ந்தார். படித்துகொண்டே ஒரு நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். அதே நேரத்தில் பெற்றோருக்கு தெரியாமல் குடிமைப் பணித் தேர்விலும் கவனம் செலுத்தினார். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற அவர், 2007-ம் ஆண்டில் பிரதான தேர்வு எழுதினார். ஆனால், 4 பொது அறிவு பாடங்களில் சோனல் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றார். தோல்வியை கண்டு துவளாமல் அதிதீவிரமாக படித்தார். கடந்த 2008-ம் ஆண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் அவர் அதிக மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 13-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் சோனல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனது முதல் முயற்சியின்போது பிரதான தேர்வில் குறைவான மதிப்பெண்களே கிடைத்தன. இதனால்நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. இதன்பிறகு பொது அறிவு பாடங்களில் முழுகவனத்தையும் செலுத்தினேன். கடந்த 2008-ம் ஆண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்களை பெற்றேன்.

குடிமைப் பணி தேர்வு எழுதுபவர்கள் தோல்விகளை கண்டு துவளக்கூடாது. அர்ப்பணிப்பு உணர்வும் விடாமுயற்சியும் இருந்தால் எந்ததடையையும் தாண்டிச் செல்லலாம். உங்கள் கனவுகளை நனவாக்குங்கள். இவ்வாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பல்வேறு துறைகளில் திறம்பட செயல்பட்ட சோனல் கோயல் தற்போது டெல்லியில் உள்ள திரிபுரா பவனில்உறைவிட ஆணையராகப் பணியாற்றி வருகிறார். சொந்த கதையைஉதாரணமாக கூறி அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE