மேட்டூர் அருகே 17-ம் நூற்றாண்டு போர் வீரனின் நடுகற்கள், புலிக்குத்தி நடுகல், குத்து கல் கண்டெடுப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அருகே பானாபுரம் பகுதியில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த போர் வீரனின் இரண்டு நடுகற்கள், புலிக்குத்தி நடுகல், குத்து கல் கண்டறியப்பட்டுள்ளது.

மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில தொன்மை பாதுகாப்பு மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் தலைவராக தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், செயலாளாராக ஆசிரியர் அன்பரசி, பொறுப்பு ஆசிரியர் விஜயகுமார், மன்ற உறுப்பினராக பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களான மாணவர்களுடன் களப்பயணம் மேற்கொண்டனர். அப்போது, பானாபுரம் பகுதியில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த தானம் கொடுத்தற்க்கான கல்வெட்டு மற்றும் 17-ம் நூற்றண்டை சேர்ந்த போர் வீரனின் இரண்டு நடுகற்கள், புலிக்குத்தி நடுகல், குத்து கல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளர் அன்பரசி கூறுகையில், “பள்ளி மாணவர்களுடன் கள ஆய்வு செய்த போது, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்து கல்வெட்டு என தெரிந்தது. இந்த கல்வெட்டு பூமிக்கு மேல் நின்ற நிலை உள்ள செந்நிறக்கல் ஆகும். 3 அடி உயரமும், 2.5 அடி அகலமும் உடைய 12 வரிகளை கொண்டது.

கொங்கு வீரபாண்டியன் பொது ஆண்டாகும். ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து இறைவனுக்கு வாணாபுரம் (பாணாபுரம்) தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது . கொடுத்தவர் அரசனாக இருக்கலாம் அல்லது பெயர்முறையாக இருக்கலாம். கல்வெட்டில் வாணாபுரம் என்று உள்ளது. தற்போது, பெயர் மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது 900 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்து கல்வெட்டு ஆகும்.

17-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 போர் வீரர்களின் நடுகற்கள் கண்டறியப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 3 அடி உயரமும், 2.5 அடி அகலம் கொண்டது. முதல் மற்றும் 2வது நடுகல்லில் போர் வீரனின் வலது கையில் வாலும், கேடயமும், நேர்த்தியான ஆடை அணிகலன்களை உள்ளது. மேலும், 2-வது நடுகல்லில், இடது கையின் கீழ் ஒரு பெண் தலையில் ஏதோ ஒன்றினை சுமந்து வருவது போல் உள்ளது. இடது காலுக்கு பின் குதிரை ஒன்று ஒடுவது போன்று உள்ளது.

அதேபோல், 17-ம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி பட்டான் கல் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அரசனோ அல்லது படை தளபதியோ புலியை கொன்று மக்களை காப்பாற்றியுள்ளார். ஏனெனில், அக்கல்லில் உள்ளவர் நிறைய ஆபரணங்கள், நேர்த்தியான உடைகள், குத்துவாலும் உள்ளது. மேலும், ஒரு பெண் நேர்த்தியான உடையும் ஆபரணங்களையும் அணிந்தது இருப்பதும், கையில் ஒரு முடிப்பு போன்று ஏதோ உள்ளது.

அதே பகுதியில் ஒரு பெருங்கற்கால ஈமசின்னமாக இருக்கும் ஒரு குத்து கல் ஒன்றும் உள்ளது. இது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்ட கல் ஆகும். இந்த கல் 4.5 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த கல்வெட்டு, நடுகற்கள், புலிக்குத்தி பட்டான் கல் ஆகியவற்றை குறித்து தெரிந்து கொள்ள, சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டியியல் ஆய்வாளர் ராஜகோபாலுக்கு அனுப்பி வைத்து, உறுதி செய்துள்ளோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE