நிமிடத்துக்கு 400 சாக்லேட், 350 ரோஜாக்கள் விற்பனை: இதுவரை இல்லாத உச்சம்! @ காதலர் தினம் 2024

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காதலர் தின கொண்டாட்டங்களையொட்டி நாடு முழுவதும் ரோஜாக்கள், சாக்லேட்டுகள், கேக் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள், தம்பதிகள் தங்கள் இணையருக்கு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம். இதனால் அன்பளிப்பு பொருட்களின் விற்பனை பிப்ரவரி மாதத்தில் அமோமாக நடக்கும். இந்தியாவில் ஒருபடி மேலே சென்று காதலர் தினத்துக்கு ஒருவாரம் முன்பாகவே, ரோஜா தினம் (பிப்.7), சாக்லேட் தினம் (பிப்.9), டெடி தினம் (பிப்.10), பிராமிஸ் தினம் (பிப்.11), ஹக் (Hug) தினம் (பிப்.12), முத்த தினம் (பிப்.13) என அந்த வாரம் முழுக்க கொண்டாடுகின்றனர்.

இதனையொட்டி, ஆன்லைன் விற்பனை தளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இது தொடர்பான பொருட்களுக்கான விளம்பரங்களை அள்ளித் தெளித்து வந்தன. இதன் காரணமாக, இந்த வாரம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு சராசரியாக நிமிடத்துக்கு 350 ரோஜாக்கள், 406 சாக்லேட்டுகள் ஆன்லைனில் விற்பனையாகியுள்ளன. சாக்லேட் தினத்தன்று தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜொமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்பிந்தர் திந்த்சா, “இது ஒரு உச்சம். தற்போது நிமிடத்துக்கு 406 சாக்லேட்டுகள் விற்பனையாகின்றன. மேற்கொண்டு 20 ஆயிரம் சாக்லேட்டுகள் மற்றும் சாக்லேட் பெட்டிகள் அடுத்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்பட உள்ளன” என்று கூறியுள்ளார்.

அதே போல, அன்பளிப்பு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் FNP நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு மணிக்கு 350 ரோஜா மலர்களை டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோஹித் கபூர் தனது எக்ஸ் பக்கத்தில், “காதலர் தினத்துக்கான கேக் விற்பனை நேற்று மாலை முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது. இரவு 10 மணிக்கு அதிகபட்ச விற்பனை ஆகியுள்ளது. ஒரு நிமிடத்துக்கான சராசரி கேக் விற்பனை இன்று மேலும் அதிகரிக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE