கொடி பறக்குற காலம் வந்தாச்சு... அரசியல் கட்சிக் கொடி தயாரிப்பு பணி தீவிரம் @ கோவை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்புப் பணி கோவையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், தேர்தலில் வெற்றி பெற, மக்களைக் கவரக்கூடிய வகையில் ஆளுமை மிக்க அதன் தலைவர், சின்னம், கொடி ஆகிய மூன்றும் மிக முக்கியமானதாகும். இவை மூன்றும் தான், வாக்காளர்களின் மனதில் அக்கட்சியை பதிய வைக்கும்.

இதில் மூன்றாவதாக உள்ள கட்சிக் கொடி தேர்தல் சமயங்களில் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் கண்ணைக் கவரும் வகையில் தோரணம் போல் கட்டப்பட்டு இருப்பதே தனி அழகாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, அரசியல் கட்சிகளின் கொடி தயாரிப்புப் பணிகள் கோவையில் தொடங்கியுள்ளன. டவுன்ஹால், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கோவை டவுன்ஹால் பகுதியில், உள்ள ஒரு விற்பனையகத்தில், கொடிகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ராஜேந்திரன் கூறியதாவது: காட்டன், மைக்ரோ கிளாத், வெல்வெட், பாலிஸ்டர் ஆகிய துணி வகைகளைக் கொண்டு, இன்ச் அளவுகளில் 20-க்கு 30 (உயரம், நீளம்), 30-க்கு 40, 40-க்கு 60, 12-க்கு 10, 8-க்கு 10 ஆகிய பல வித அளவுகளில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், தேமுதிக, அமமுக, பாமக, விசிக உள்ளிட்ட அனைத்து வகை அரசியல் கட்சிகளின் கொடிகளும் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 20-க்கு 30 என்பது சராசரியான கொடி அளவாகும். இந்த அளவுள்ள கொடியைத் தான் அதிகளவில் வாங்குவர். நாங்கள், மொத்தமாக துணி வாங்கி, அதை மேற்கண்ட பல்வேறு அளவுகளில் பிரித்து, ஆர்டர் கொடுக்கும் அரசியல் கட்சியின் கொடியை வடிவமைத்து, துணியில் அச்சேற்றுகிறோம்.

அதன் பின்னர், அவற்றை எங்களை நம்பி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல நூறு எண்ணிக்கையிலான தையல் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் கொடுக்கிறோம். அவர்கள் அக்கொடியின் சுற்றுப்புறப் பகுதிகளை ஓரம் அடித்து, கட்டுவதற்கு ஏற்ப காது பகுதிகளை வைத்து தைத்து எங்களிடம் ஒப்படைக்கின்றனர்.

நாங்கள் ஆர்டர் கொடுத்த அரசியல் கட்சியினருக்கு அவற்றை விற்கிறோம். வழக்கமாக தேர்தல் காலங்களில் கோவை, திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அரசியல் கட்சியினர் எங்களிடம் ஆர்டர் கொடுத்து, கொடியை பெற்றுச் செல்கின்றனர். தேர்தல் நெருங்க உள்ள சூழலில், கொடி தயாரிப்பு மற்றும் விற்பனைப் பணி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE