காந்திய சிந்தனைகளும் அறப்பணியும் - 68 ஆண்டுகள் @ சிதம்பரம் காந்தி மன்றம்

By க.ரமேஷ்

ஊர்கள் தோறும் தலைவர்களின் பெயர்களின் மன்றங்கள் தோன்றி இயங்குவது உண்டு. அதில் சொற்ப எண்ணிக்கையிலான மன்றங்களே தொன்று தொட்டு தொடர்ந்து இயங்கி வரும்; அந்த மன்றம் என்ன கொள்கையோடு உருவாக்கப்பட்டதோ அதை தொடர்ந்து செயல்படுத்தும். அப்படியான மன்றங்களில் ஒன்றுதான் சிதம்பரம் காந்தி மன்றம்.

சிதம்பரத்தில் 68 ஆண்டுகளாக மாணவர்களிடம் காந்திய சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் அறப் பணியில் இந்த மன்றம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி பிள்ளையின் புதல்வர் குஞ்சிதபாதத்தின் முயற்சியால் 1956-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் சிதம்பரத்தில் காந்தி மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடக்கத்தில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த காந்தி மன்றம், 1971-ம் ஆண்டு சிதம்பரம் வாகீச நகரில் கட்டப்பட்ட ஓடு உள்ள கட்டிடத்துக்கு மாறியது. அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி இதனை திறந்து வைத்தார். 2006-ம் ஆண்டு இந்த காந்தி மன்றம் பொன் விழா நடந்தது. அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையைக் கொண்டு சிதம்பரம் காந்தி மன்றத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்பட்டது.

இப்பொன் விழா கட்டிடத்தை பொள்ளாச்சி மகாலிங்கம் முன்னிலையில், புதுச்சேரியில் அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி திறந்து வைத்தார். பல்வேறு தருணங்களில் இந்த காந்தி மன்றத்துக்கு முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், மனுபென் காந்தி, ஆச்சார்ய துளசி அடிகள், ம.பொ.சி, டாக்டர் மு.அறம், சர்தார் வேதரத்தினம், புதுவை லெப்டினன்ட் கவர்னர் பி.டி. ஜாட்டி,ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய கிருபளானி, கி.வா. ஜகந்நாதன், நா.பார்த்தசாரதி, நாரண.

சிதம்பரம் காந்தி மன்றத்தில் நடந்த சர்வ சமய பிரார்த்தனையில்
பங்கேற்ற பள்ளி மாணவர்கள்.

துரைக்கண்ணன், குன்றக்குடி அடிகளார் மற்றும் பல அறிஞர் பெருமக்கள் வருகை தந்துள்ளனர். இன்று வரையிலும் இந்த காந்தி மன்றத்தில் மாலை நேர வகுப்புகள், வெள்ளி தோறும் சர்வ சமய பிரார்த்தனை, மாதந்தோறும் சிந்தனை மேடை, மருத்துவ முகாம்கள், பள்ளி, கல்லூரிகளில் காந்திய சிந்தனை வகுப்புகள் ஆகிய சமுதாய நலப்பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2016-ம் ஆண்டில் இந்த காந்தி மன்றத்தின் வைர விழா நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. தற்போது, சிதம்பரம் காந்தி மன்றத்தின் பணிகளை தலைவர் ஞானம், செயலாளர் ஜானகிராமன்,பொருளாளர் சிவராமசேது, 30 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் காந்திய அன்பர்கள் மேற்கொண்டு செய்து வருகின்றனர்.

தலைவர் ஞானம் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சென்று காந்திய கோட்பாடுகள் குறித்து உரையாற்றி வருகிறார். மன்றத்தின் துணை செயலாளர் முத்துக்குமரன் பள்ளி மாணவர்களிடையே காந்தியடிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு, காந்திய சிந்தனைகளை பரப்பி வருகிறார்.

‘மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று இந்த காந்தி மன்ற வளாகத்தில் சிறப்பு சர்வ சமயப் பிரார்த்தனை நடைபெற்றது. காந்தி மன்றத் தலைவர் ஞானம், மன்ற பொருளாளர் சிவராமசேது, மன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், சின்னதுரை, தமிழரசி சேகர், கலியபெருமாள், சீனுவாசன் ஆகியோர் காந்திய சிந்தனைகளை எடுத்துக் கூற அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ ,மாணவிகள் பள்ளியின் துணை முதல்வர் அம்பிகா தலைமையில் சர்வ சமயப் பிரார்த்தனையில் பங்கேற்றனர். திருக்குறள், பகவத் கீதை, குர் ஆன், பைபிள் மற்றும் காந்திஜி பற்றிய பாடல்களை இசையுடன் பாடினர்.

அவ்வப்போது பள்ளி மாணவர்களை அழைத்து காந்தியம் சார்ந்த அறநெறிகளை இந்த மன்றத்தினர் போதித்து வருகின்றனர். கல்வி நிலையங்களில் இருந்து அழைத்தால், அங்கும் சென்று காந்திய சிந்தனைகளை பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக வளர் இளம் பருவத்தினரிடையே, மது ஒழிப்பு குறித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மோசமான மது நுகர்வு அதிகரித்துள்ள இன்றைய சூழலில் சிதம்பரம் காந்தி மன்றத்தின் தேவை இச்சுற்று வட்டாரப் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

“தொடர்ந்து அடுத்த தலைமுறையினரும் இந்த மன்றத்தை எடுத்து நடத்தி, காந்தியின் அகிம்சையை, அவரின் அறவழிச் சிந்தனையை போதிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று காந்தி மன்றத்தினர் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

19 days ago

மேலும்