கேரளாவில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய தமிழ்க் குடும்பங்கள்!

By என்.கணேஷ்ராஜ்

தேனி: கேரள மாநிலம் மூணாறில் வசிக்கும் தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி தங்கள் வீடுகள் முன்பு பொங்கல் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

தேனி மாவட்டத்துக்கு அருகே கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக, மூணாறில் தமிழர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இங்கு பலரும் பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டனர். இதற்காக தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து தலைவாசலில் கரும்புகளை கட்டினர்.

பின்பு வீடுகளின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கேரளப்பகுதிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் பலரும் இந்த வழிபாடுகளில் பங்கேற்றனர். தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட பலரும் பாரம்பரிய நினைவுகளுடன் வழிபாடுகளை மேற்கொண்டது பலரையும் கவர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE