அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதத்தை நேற்று தொடங்கினார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட ஆடியோவில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்களுக்கு புனிதமான தருணம். எங்கும் எதிலும் ராமரின் புகழ்பாடும் கீர்த்தனைகள், பஜனைகள் ஒலிக்கின்றன. அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளான ஜன. 22-ம் தேதியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன.

வாழ்வில் முதல் முறையாக தனித்துவமான உணர்வு, தெய்வீக அனுபவத்தை உணர்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பல தலைமுறை கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாக கடவுள் என்னை நியமித்துள்ளார்.

நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் தெய்வீக உணர்வைஎழுப்ப வேண்டும். ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முன்பு பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகள், விதிகளை வேதங்கள் எடுத்துரைக்கின்றன. இதன்படி 11 நாட்கள் விரதத்தை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறேன். நாசிக் நகரில் புனித காலாராம் கோயிலில் 11 நாட்கள் விரதத்தை தொடங்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

இன்றைய தினம் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகும். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பாரதத்தின் ஆன்மாவுக்கு அவர் புத்துயிர் அளித்தார். அவரது வழிகாட்டுதலின்படி நமது அடையாளத்தை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கில் நான் பங்கேற்க உள்ளேன். அப்போது 140 கோடி இந்தியர்கள் என் மனதிலும், எனது ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் இருப்பார்கள். ராமரின் ஒவ்வொரு பக்தனும் என்னுடன் இருப்பார். ​​உங்களின் சக்தியை நான் கருவறைக்குள் சுமந்து செல்வேன். கடவுள் உருவமற்றவர் என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். எனினும் மக்களின் வடிவில் கடவுள் இருப்பதை நான் நேரில் கண்டு உணர்ந்திருக்கிறேன். அந்த மக்கள் ஆசீர்வாதங்களைப் பொழியும்போது, நான் புதிய சக்தியை பெறுகிறேன்.

உங்கள் உணர்வுகள், வார்த்தைகள், எழுத்தில் என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். உங்கள் ஆசீர்வாதங்கள் வெறும் வார்த்தை அல்ல. அவை தெய்வீக மந்திரம். உங்கள் உணர்வுகளை நமோ செயலியில் பகிருங்கள். நாம் அனைவரும் ராமர் பக்தியில் மூழ்குவோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE