“மதுவினால் மன உளைச்சலுக்கு ஆளானேன்” - கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் ஓபன் டாக்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் தனது ஸ்விங் பவுலிங் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் பந்து வீச்சாளர் பிரவீன் குமார். 2018-ல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்த சூழலில் மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார்.

37 வயதான அவர், கடந்த 2007-ல் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மொத்தமாக 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 112 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். 5 ஐபிஎல் அணிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த 2012-ல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.

“நான் இந்திய அணியில் இணைந்தபோது மது அருந்துவதை நிறுத்துமாறு சீனியர் வீரர்கள் சொன்னார்கள். அதோடு மேலும் சில விஷயங்களை கைவிடுமாறு என்னிடம் தெரிவித்தார்கள். இளம் வீரர்களை கண்ணியத்துடன் சீனியர்கள் அணுகினார்கள். இருந்தாலும் அனைவரும் மது அருந்துவார்கள். ஆனால், எனது பெயர் மட்டும் வெளி உலகுக்கு தெரியவந்தது. எனக்கு நெகட்டிவ் இமேஜ் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் அதை செய்தது யார் என்றும் நான் அறிவேன். அவரது பெயரை நிச்சயம் சொல்ல மாட்டேன். அது யார் என எல்லோருக்கும் தெரியும்.

2018-ல் ஒரு ஐபிஎல் அணியில் பவுலிங் பயிற்சியாளராக இணைய இருந்தேன். அது நடக்கவில்லை. எனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேச ரஞ்சி அணியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கூட எனக்கு மறுக்கப்பட்டது. இதெல்லாம் நான் மது அருந்துவேன் என்ற காரணத்தால் தான். நான் மைதானத்தில் மது புட்டி உடன் வரவில்லை, டிரெஸ்ஸிங் ரூமில் அதை திறக்கவில்லை.

அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானேன். அதற்கான சிகிச்சை மேற்கொண்டேன். மின் விசிறியை வெறுமனே 5 மணி நேரம் வெறித்து பார்த்துள்ளேன். சில நாட்கள் ஹரித்வார் சென்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்தும் விவகாரம்: கடந்த 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியது. இந்த விவகாரம் பெரிய அளவில் கவனம் பெற்றது. அப்போதைய ஆஸி. அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் இதில் சிக்கி ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாத அளவுக்கு தடையை எதிர்கொண்டனர். இத்தகைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்துவது குறித்து பிரவீன் குமார் பேசியுள்ளார்.

“முன்பெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் பந்தை சேதப்படுத்தும் செயலில் சற்று ஈடுபடுவது வழக்கம் தான். நான் கேள்விப்பட்ட வரையில் பாகிஸ்தான் அணி இந்த செயலை அதிகம் செய்தது என்பார்கள். இப்போது கேமராக்கள் அதிகரித்துவிட்டது. அதை எப்படி செய்ய வேண்டும் மற்றும் அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். அனைவராலும் அதை செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE