மழையில் கரையும் மண் வீடுகள்: இருளில் தவிக்கும் வெள்ளிமுடி முதுவர்கள்

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: மண், நாணல் குச்சிகளை கொண்டு கட்டப்பட்ட மண் வீடுகள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இல்லாததால் வெள்ளிமுடி வன கிராமத்தில் கான்கிரீட் குடியிருப்புகளை கட்டித்தர வெள்ளிமுடி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, அமராவதி, உடுமலை ஆகிய 6 வனச்சரகங்கள் உள்ளன. இதில் வால்பாறை வனச்சரகத்தில், காடம்பாறை, வெள்ளிமுடி, மாவடப்பு, கீழ்பூனாட்சி, கருமுட்டி ஆகிய மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

வெள்ளிமுடி பழங்குடியின கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட முதுவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். வெள்ளிமுடி பழங்குடியின வன கிராமத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் பழங்குடியின மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை அடுத்துள்ளது காடம்பாறை அணை. இங்கிருந்து, 10 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளிமுடி பழங்குடியின கிராமம். இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் வெள்ளிமுடி மலைவாழ் மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வீடுகளை இரவு நேரத்தில் வன விலங்குகள் எளிதில் சேதப்படுத்தி விடுவதால், தினந்தோறும் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது.

இங்கு வசிக்கும் மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களில் தைல புல், ஆரஞ்சு, ஏலம், மிளகு, காபி மற்றும் எலுமிச்சை உள்ளிட்ட காய்கறி தோட்ட பயிர்களை சாகுபடி செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். 55 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதி மக்கள் நிலையான குடியிருப்பு, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு இன்று வரை போராடி வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது: வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட காடம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மலை புலையர் சமூகத்தினரும், வெள்ளிமுடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் முதுவர் சமூகத்தினரும் வசித்து வருகின்றனர்.

காடம்பாறை அணை பகுதியில் இருந்து மலைபுலையர் குடியிருப்பு வரை மட்டுமே போக்குவரத்து வசதி உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளிமுடிக்கு பேருந்து வசதி கிடையாது. மின்வசதி, பாதுகாப்பான குடியிருப்புகள் இல்லை. களிமண், நாணல் குச்சி, மூங்கில் தடுப்புகள் இவற்றை கொண்டு மட்டுமே வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர்.

வனத்துறை சார்பில் கான்கிரீட் வீடு கட்டித்தருவதாக கடந்த பல ஆண்டுளாக கூறி வருகின்றனர். ஆனால் இன்று வரை வீடு கட்டித்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மண்ணால் கட்டப்பட்ட வீடுகளில் ஒவ்வொரு மழை காலங்களிலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் வசித்து வருகின்றனர். வனத்துறையினர் வழங்கிய சூரிய ஒளி விளக்கும் சரியாக எரியாததால் இருட்டில் தான் வசிக்க வேண்டியுள்ளது.

இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு பொதுக் கழிப்பிட வசதி கூட இல்லை. வனத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்குடியின இனத்தை சேர்ந்த மக்களுக்கு அரசின் சார்பில் நிலையான வீடு கட்டித்தர வேண்டும். கழிப்பிடம், நடைபாதை, தெருவிளக்கு போன்றவை அமைக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE