மதுரையில் 24 மணி நேரமும் ரத்த தான சேவை: சிங்கப்பூரில் இருந்து ஒருங்கிணைக்கும் சமூக ஆர்வலர்!

By என். சன்னாசி

மதுரை: உயிர் காக்கும் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் சேவையாற்றி வரும் ரத்த தான அமைப்பை சிங்கப்பூரிலிருந்து கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர். மதுரையில் ‘வி-கேர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட்’ என்ற தன்னார்வ அமைப்பு ரத்த தானம் வழங்கும் சேவையை 2005-ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக பி.காம் பட்டதாரி முகமது இஸ்மாயில் (45) உள்ளார். ஜாகீர் உசேன், லத்தீப் ஷெரீப், ஷேக் இஸ்மாயில் உள்ளிட்டோருடன் இணைந்து இந்த சேவையை செய்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 5 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் ரத்த தானம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடும்ப சூழலால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு பணிபுரிய சென்ற முகமது இஸ்மாயில், அங்கிருந்தபடியே ரத்த தான அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார். இதுகுறித்து முகமது இஸ்மாயில் கூறியதாவது: மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் அவசர தேவைக்கென 24 மணி நேரமும் சேவையாற்றி வருகிறோம். இது தவிர, திருவனந்தபுரம், எர்ணாகுளம், சென்னை உள்ளிட்ட வெளியூர் மருத்துவமனைகளுக்கும் அவசர தேவைக்கு மதுரையிலிருந்து ரத்த தான கொடையாளர்களை அனுப்பி உதவி செய்துள்ளோம்.

முகமது இஸ்மாயில்

தற்போது சமுக வலைதளங்களின் மூலம் பல்வேறு ஊர்களில் ரத்ததான கொடை யாளர்களை தொடர்பு கொண்டு உதவி செய்ய ஏற்பாடு செய்கிறோம். எங்களது அமைப்பில் அனைத்து மதங் களையும் சேர்ந்த 1500 பேர் கொடையாளர்களாக பதிவு செய்துள்ளனர். தற்போது ‘வி கேர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் ரத்த தான குழுவை ஏற்படுத்தி ரத்த தானம் செய்து வருகிறோம்.

இது தவிர, இலவச மருத்துவ முகாம், மது, புகை தடுப்பு விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கல்வி உதவி போன்ற பணிகளையும் மேற்கொள்கிறோம். 2007-ம் ஆண்டு நெல்பேட்டை பகுதியில் ஏழை மக்களுக்கென ‘வி.கேர்.’ என்ற பெயரில் மாலை நேர இலவச கிளினிக் ஒன்றை தொடங்கி 8 ஆண்டுகள் நடத்தினோம்.

இங்கு பணியாற்றிய இளம் மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு படித்து வெவ்வேறு ஊர்களில் பணிபுரிவதால், அந்த கிளினிக்கை தொடர முடியாத சூழல் உள்ளது. இருப்பினும், இந்த கிளினிக்கை மீண்டும் தொடங்க முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE