மதுரையில் ஆயுஷ் மருத்துவமனை - குறைந்த கட்டணத்தில் சிகிச்சை!

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரை பொன்மேனியில் செயல்படும் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்திய மருத்துவ முறைகளை உலகம் முழுவதும் அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் வேலூரை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் ( சிம்கோ ) அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 மாவட்டங்களில் இம்மருத்துவ மனைகள் செயல்படுகின்றன.

மதுரை பொன்மேனியில் செயல்படும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் டாக்டர்கள் திவ்யா ( சித்தா ), அகிலா ( யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ), அஸ்வினி ( ஹோமி யோபதி ) ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படும் இம்மருத்துவமனையில் குறைந்த கட்டணமே பெறப்படுகிறது.

மேலும், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மருத்துவ முகாம்களை நடத்தி இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து மதுரை அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மருத்துவ அலுவலர் எம்.திவ்யா கூறியதாவது: வேலூர் சிம்கோ நிர்வாக இயக்குநர் பி.கிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி மதுரையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய மருத்துவ முறைகளில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

ஆலோசனை கட்டணமாக ஒருமுறை ரூ.150 செலுத்தினால் போதும், அந்த மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் மருத்துவ ஆலோசனை பெறலாம். மருந்து, மாத்திரைகள் 50 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப் படுகிறது. தற்போது ஹோமி யோபதி, சித்தா, யோகா மற்றம் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளை அளித்து வருகிறோம்.

பாரம்பரியமிக்க பஞ்சகர்மா, நீராவிக் குளியல், மூலிகை மசாஜ், ஷிரோதாரா தெரபி மூலம் சிகிச்சை அளிக்கிறோம். தற்போது குளிர்கால சீதோஷ்ண நிலையால் ஏற்படும் நோய் பாதிப்பி லிருந்து தற்காத்துக் கொள்வதற்கான கஷாயம் மற்றும் மருந்துகள், தோல் நோய்க்கான மருந்துகளை வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE