புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த ஆண்டில் தொழில்நுட்ப உலகை ஆளப்போகும் விஷயங்கள் என்னவாக இருக்கும்?
பிட்காயின் மாயம்
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பிட்காயின் பற்றித் தெரியாதவர்கள் அநேகர். ஆனால், 2017-ல் ஒரு பிட்காயினின் மதிப்பு, பத்தாயிரம் டாலர்களைக் கடந்து உச்சத்தைத் தொட்ட பின்னர், இந்த ‘இணைய நாணயம்’ பிரபலமாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் வாங்கி வைத்தவர்கள், இப்போது கோடீஸ்வரர்கள் என்று சொல்லப்படுவதும் பிட்காயின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியிருக்கிறது.
சரி, இந்த ஆண்டு பிட்காயின் மதிப்பு எப்படி இருக்கும், ஏறுமா, இறங்குமா? ‘கிரிப்டோ கரன்ஸி’ எனப்படும் எண்ம நாணய வகையைச் சேர்ந்த பிட்காயினின் அடிப்படை மீது நம்பிக்கை கொண்டவர்கள் பிட்காயின் மதிப்பு உயரும் என்றே சொல்கின்றனர். அயர்லாந்து பிளாக்செயின் சங்கத்தின் தலைவர் ருபேன் காட்பிரே அடுத்த சில ஆண்டுகளில் பிட்காயின் மதிப்பு 2 லட்சம் டாலர்களைத் தொடும் என்று ஆருடம் கூறியிருக்கிறார்.
இன்னொரு புறம், இது அங்கீகரிக்கப்படாத நாணயம் என்று இதன் பாதகமான அம்சங்களைச் சொல்பவர்கள், பிட்காயின் காற்றுப்போன பலூனாகும் என எச்சரிக்கின்றனர். ஆனால், ஒன்று நிச்சயம், பிட்காயினின் ஆதார பலமாகக் கருதப்படும் ‘பிளாக்செயின் நுட்பம்’ இந்த ஆண்டும் அதிகமாகக் கவனத்தை ஈர்க்க வாய்ப்பிருக்கிறது. பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், அதன் உறுப்பினர்கள் அனைவராலும் பராமரிக்கப்படும்போது, லெட்ஜர் முழுவதும் அப்டேட் செய்யப்படுவதைத்தான் பிளாக்செயின் என்கின்றனர். இந்த அடிப்படை நுட்பத்தை வங்கிகளும் நிதி அமைப்புகளும் ஏற்கெனவே தீவிரமாக ஆய்வுசெய்துவரும் நிலையில், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இது பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
எனவே, பிட்காயின் போக்கு மீதும் முக்கியமாக பிளாக்செயின் நுட்பம் மீதும் ஒரு கண் வைத்திருக்கலாம். பிட்காயின் மட்டுமல்ல, ஈதர், லைட்காயின் உள்ளிட்ட மாற்று எண்ம நாணயங்களும் தலைப்புச்செய்தியில் அடிக்கடி அடிபடலாம்.
5ஜி நுட்பம்
தொலைத்தொடர்புத் துறையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு சோதனையான ஆண்டுதான். இந்தத் துறையில் பெரும் போட்டி ஏற்பட்டு, பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது. இது நுகர்வோருக்கு எந்த அளவு நல்லது எனத் தெரியவில்லை. ஆனால், தொழில்நுட்ப நோக்கில் பார்த்தால், இந்த ஆண்டு 5ஜி நுட்பம் மீதான கவனம் அதிகமாக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறியுள்ள நிலையில், 5ஜிக்கான பாய்ச்சலுக்கு உலகம் காத்திருக்கிறது. 5ஜி நுட்பத்தில் இணையம் பத்து மடங்கு வேகத்தில் உள்ளங்கையில் வந்து சேரும். இதற்கான பிரத்யேக போன்களும் சேவைகளும் உருவாகலாம். இதற்கான தயாரிப்புப் பணிகள் இந்த ஆண்டு தீவிரமாக வாய்ப்புள்ளது. இணைய ஸ்டீரிமிங், வீடியோ கேம் விளையாட்டு, ஆக்மண்டெட் ரியாலிட்டி போன்ற கருத்தாக்கங்கள் இன்னும் பரவலாக வாய்ப்புள்ளது.
செயற்கை நுண்ணறிவு
ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நிலை மாறிவிட்டது. இந்தத் துறையில் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றுவருவதோடு, இந்த நுட்பம் சார்ந்த சோதனை வடிவிலான சேவைகளும் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ‘இயந்திரக் கற்றல்’ எனச் சொல்லப்படும் நுட்பம் சார்ந்த சேவைகள் பிரபலமாகி வருகின்றன. அரட்டை மென்பொருள்கள் தொடங்கி பலவிதமான சேவைகளில் இவற்றின் தாக்கத்தைப் பார்க்கலாம். வரும் ஆண்டு, இந்த நுட்பம் வெகுமக்களுக்கு மேலும் நெருக்கமாக வாய்ப்புள்ளது. ரோபோக்கள் பரப்பிலும் நிறைய புதுமைகளையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளலாம்.
எல்லாமே ஸ்மார்ட்
ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச் என நீளும் பட்டியலில் இப்போது ஸ்மார்ட் சாதனங்களும் சேர்ந்திருக்கின்றன. கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவில் ஆர்வம் காட்டி வருகின்றன. இல்லங்களில் செயல்படக்கூடிய இணையத்துடன் இணைக்கப்பட்ட நவீன சாதனங்களாக இவை இருக்கின்றன. தேவைக்கேற்ப பாடல்களை ஒலிபரப்பும், அலாரம் அடித்தால் கதவைத் திறக்கும் திறன் கொண்ட அம்சங்கள் இந்த ஸ்மார்ட் இல்ல சாதனங்களில் பரவலாகி புழக்கத்துக்கு வரக்கூடும்.
இணையத் தாக்குதல்
இணையத்தில் இணைபவர்களும் இணையத்துடன் இணைக்கப்பட்ட பொருட்களும் அதிகரித்துவரும் நிலையில், இணையம் வழியான தாக்குதலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டு ரான்சம்வேர் தாக்குதல் ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டும் ஹேக்கர்களின் கைவரிசையை எதிர்பார்க்கலாம். இணையத் தாக்குதல் தவிர, தரவுகள் திருட்டும் அதிகரிக்கலாம். இந்த விஷயத்தில் நிறுவனங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனி மனிதர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அடிப்படை பாஸ்வேர்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
நிதி நுட்ப சேவைகள்
கடந்த அண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கவனத்தை ஈர்த்த நிலையில், புதுமையான நிதி நுட்ப சேவைகளை இந்த ஆண்டு கூடுதலாக எதிர்பார்க்கலாம். இணையம் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குவதற்கான சேவைகளும் செயலிகளும் அறிமுகமாகலாம். ‘பியர் டு பியர்’ கடன் எனச் சொல்லப்படும் பொதுமக்கள் இணையம் மூலம் தங்களுக்குள் கடன் அளித்துக்கொள்ளும் சேவை மேலும் பிரபலமாக வாய்ப்புள்ளது. செல்போன் மூலம் கடன் வசதி அளிக்கும் செயலிகளும் பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம். ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவதும் அதிகமாகலாம்.
எலெக்டிரிக் கார்கள்
தானியங்கி கார்கள் எனச் சொல்லப்படும் டிரைவர் இல்லாமல் மென்பொருள் மூலம் இயங்கும் கார்கள் தொடர்பான ஆய்வு இந்த ஆண்டு மேலும் தீவிரமாகலாம். கூகுள், ஆப்பிள், டெஸ்லா எனப் பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் இந்தப் பிரிவில் கவனத்தைத் திருப்பியுள்ளன.
மொழியில் கவனம்
இணையத்தைப் பொறுத்தவரை அடுத்த 100 கோடிப் பயனாளிகள் மீதுதான் நிறுவனங்களின் கவனம் இருக்கும். குறிப்பாக, இந்தக் கவனம் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பயனாளிகள் மீது இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தப் புதிய பயனாளிகளைக் கவர்வதில் நிறுவனங்கள், சேவைகளை உருவாக்குபவர்கள் கவனம் செலுத்தக்கூடும். இதில் நிகழக்கூடிய முக்கிய மாற்றம் மொழி சார்ந்ததாக இருக்கும். ஏனெனில், இதுவரை இணையம் என்பது பிரதானமாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் பயன்படுத்தும் நுட்பமாக இருக்கிறது.
ஆனால், புதிய பயனாளிகள் ஆங்கிலம் அல்லாமல் தங்கள் தாய்மொழியில் இணையத்தைப் பயன்படுத்த விரும்புகிறவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் செல்போன்கள் வாயிலாகவே இணையத்தில் நுழைய வாய்ப்புள்ளது. இதன் விளைவாக செல்போன்களின் இயங்குதளம், உள்ளீட்டுக்கான விசைப்பலகை ஆகியவை உள்ளூர் மொழிகளில் அமைய அதிகம் வாய்ப்புள்ளது. எல்லாவற்றிலும் மொழியாக்க சேவைகள் வரலாம். குரல்வழி சேவைகளும் தீவிரமாகும். கடைக்கோடி மக்களையும் சென்றடையக்கூடிய சேவைகளை உருவாக்குவதில் மென்பொருளாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
புதுமை ஸ்மார்ட் போன்கள்
இந்த ஆண்டு ஸ்மார்ட் போன் உலகில் பல புதிய அறிமுகங்களை எதிர்பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செயல்படும் மேம்பட்ட கேமராக்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்ய தயாராகின்றன. ‘போர்டபிள் ஸ்மார்ட்போன்’ என சொல்லப்படும், மடித்து வைக்ககூடிய திரைகள் கொண்ட போன்கள் அறிமுகமாகலாம். சாம்சங், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இதில் தீவிரமாக உள்ளன. மொபைல் சிப் ஆற்றலும் அதிகரிக்கும்.
உறுதிமொழிக்கு உதவும் செயலி
புத்தாண்டு பிறந்ததும் புதிய பழக்கம் அல்லது புதிய உறுதிமொழி எடுத்திருப்பீர்கள். ஆனால், இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து தக்கவைப்பது சவாலான விஷயம்தான். புத்தாண்டு உறுதிமொழியைக் கைவிடாமல் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்க நினைப்பவர்கள், இதற்கென உள்ள இணைய சேவைகள், செயலிகளை நாடலாம். கோல்ஸ் ஆன் டிராக் (http://www.goalsontrack.com/), கோச் மீ (https://www.coach.me/habit-tracker) உள்ளிட்ட சேவைகளை முயன்று பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
7 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago