மனித நேயத்தை புதுப்பித்த மழை வெள்ளம் @ நெல்லை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் உணவும், தண்ணீரும் அளித்து பசியாற்றும் சேவையை கடந்த 5 நாட்களாக மேற்கொண்டிருக்கிறார்கள். இதுபோல் மீட்பு பணிகளிலும் உயிரை துச்சமென மதித்து ஈடுபட்டவர்களை பாதிக்கப்பட்டவர்கள் நன்றி பெருக்குடன் நினைவு கூர்கிறார்கள்.

திருநெல்வேலியில் கடந்த 5 நாட்களாக தாமிரபரணி ஆற்றங்கரையோரம் முழுக்கவும், திருநெல்வேலி சந்திப்பு, டவுன் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பலரும் தொண்டுள்ளத்துடன் உதவுவதைக் காணமுடிந்தது. அதிகனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தபோது தவித்த பெண்கள், முதியோர்களையும், சிறுவர்களையும் அந்தந்த பகுதி இளைஞர்களே ஒருங்கிணைந்து செயல்பட்டு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

டவுனில் சாலைத்தெரு, குருந்துடையார்புரம் காமராஜர்புரம் பகுதிகளில் பழைய டியூப்களை எடுத்துவந்து அவற்றில் முதியவர்களை வைத்து காப்பாற்றியதை இப்பகுதி மூதாட்டிகள் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் வரும்முன்னரே பல இடங்களிலும் இளைஞர்கள் களமிறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வந்த நாட்களில் வெள்ளம் வடிந்தாலும் சாலைகள், பாலங்கள் சேதமடைந்ததால் துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு மக்கள் செல்ல முடியாத நிலையில் முகாம்களில் தங்கியிருந்தவர்கள், வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்து சமையல் செய்ய முடியாத நிலையில் தவித்தவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரின் பசியாற்ற பல்வேறு கட்சியினரும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும், இளைஞர்களும் களமிறங்கி கடந்த 5 நாட்களாக பணியாற்றுகிறார்கள். 3 வேளையும் உணவு சமைத்து வாகனங்களில் எடுத்துவந்து விநியோகம் செய்து வருகிறார்கள்.

வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட குருந்துடையார்புரம், காமராஜர்புரம் பகுதிகளில் உள்ளவர்களுக்கு மேலப்பாளையத்திலுள்ள ஜமாத்துகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மதிமுக மாவட்ட செயலர் கேஏஎம் நிஜாம் ஏற்பாட்டில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. சேவாபாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன.

பத்தமடை அருகே கொழுமடை கிராமத்தில் மரக்கிளையில் பலமணிநேரம் உண்ணாமல் உறங்காமல் தவித்த விவசாயி செல்லையா (72) என்பவரை எஸ்டிபிஐ கட்சியினர் உயிரை பணயம் வைத்து மீட்டது தொடர்பான தகவல்களும், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியை சேர்ந்த 23 ஐயப்ப பக்தர்களை திருநெல்வேலி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் மீட்டு, அவர்களுக்கு சைவ உணவு வழங்கி வழியனுப்பி வைத்தது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கல்லூரியில் தங்கிக் கொள்ளலாம் என்று பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நிர்வாகம் அறிவித்தது போன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதியிலுள்ள டிடிடிஏ பள்ளிகளில் தங்குவதற்கு திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகமும் அறிவிப்பு செய்தது. அந்ததந்த பகுதி கோயில்களிலும், மண்டபங்களிலும் தங்கி கொள்ளவும் கோயில் நிர்வாகங்கள் அனுமதித்திருந்தனர். சாதி, மதம் கடந்து மனிதநேயத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள மழை வெள்ளம் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE