‘காகிதங்களை காதலிப்போம். ஏனெனில்...’ - ஒரிகாமி கலைஞர் தியாகசேகர்

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: மழை நீரில் மிதக்கும் காகித கப்பல், காற்றில்பறக்கும் காகித அம்பு, சிறு குழந்தைகள் போட்டோ எடுத்து மகிழும் காகித கேமரா என காகிதத்தை மடிக்கும் கலைக்கு பெயர்தான் ஒரிகாமி. ஜப்பானில் தோன்றிய இந்த கலை உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது. ஒரிகாமி எனப்படும் காகித மடிப்பு கலை காகிதங்களை பயன்படுத்தி பசை இன்றி காகிதச் சிற்பங்களை உருவாக்கும் கலை ஆகும். காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை. ஆனால் ஒரிகாமி எனப்படும் ஜப்பானிய காகிதச் சிற்பக்கலையில் காகிதத்தை கொண்டு விலங்குகள், மனிதர்கள், பறவைகள் என நமது கற்பனையில் தோன்றும் எல்லாமே காகித வடிவங்களாக மாறுகின்றன.

இது வெறும் பொழுதுபோக்கு கலை இல்லை, அறிவியல் தொழில் நுட்பம் கொண்ட உயர்ந்த கலை என்கிறார் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரிகாமி கலைஞர் தியாகசேகர். தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் காகித மடிப்புக் கலையைக் கொண்டு சேர்த்திருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட வடிவங்களை உருவாக்கி மாணவர்களுக்கு எளிமையான வழிகளில் கற்றுத் தருகிறார். ஒரிகாமி கலை குறித்து தியாகசேகர் கூறியதாவது: தமிழகத்தில் பாய்முடைவது, பனைஓலை பின்னுவது நமது கைவினை கலை என்பது போல ஜப்பானில் காகிதத்தை கொண்டு சிற்பங்கள் செய்வது ஒரிகாமி எனும் மரபு கலை ஆகும். இது தனிமனிதனின் கண்டுபிடிப்பு கிடையாது.

ஜப்பானிய மக்களிடம் இயல்பாக தோன்றிய கலை ஆகும். ஒரிகாமி என்பது ஜப்பானிய சொல், ‘ஒரி’ என்றால் மடிப்பு, ‘காமி’ என்பது காகிதம். இது தமிழில் காகித மடிப்பு கலை எனப்படுகிறது. இது காகிதத்தில் உருவங்களை உருவாக்கும் அறிவியல் கலை. கணிதத்தின் வடிவியலை அடிப்படையாக கொண்டது. காகித பொறியியல் எனலாம். அகிராயூசிசவா ‘ஒரிகாமியின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். ஒரு காகிதம் மடிக்கப்படும்போது அதில் எத்தனை விதமான கோணங்கள். மடிப்புகள் உருவாகச் சாத்தியமிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம். இது தான் கணிதத்தின் அடிப்படை. ஒரிகாமி என்பது கலைக்கும் விஞ்ஞானத்திற்குமானதொரு பாலம். கணிதமும் இயற்பியலுமே இந்தக் கலையின் ஆதாரங்கள். உலகின் பலநாடுகளில் இக்கலை பள்ளிகளில் கணிதமும் விஞ்ஞானமும் கற்பிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்ரேலிய பள்ளிகளில் ஓரிகாமெட்ரியா என்று கணிதமும் ஒரிகாமியும் ஒன்றிணைந்த கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்னமும் ஒரிகாமி குறித்து அதிக கவனம் உருவாகவேயில்லை. விடுமுறையில் மாணவர்கள் ஒரிகாமி கற்றுக்கொண்டால் அவர்களின் கற்பனையும், கற்றுக்கொள்ளும் திறனும் மேம்படும்என்பதை பள்ளி மாணவர்களின் வழியே நேரடியாக அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் நாம் காகிதத்தை வெறும் குப்பையாகவே நினைக்கிறோம். அந்த மனநிலையை மாற்ற அதிலிருந்து நல்ல கலைப்படைப்புகளை உருவாக்க முடியும்.

நாம் குப்பை என்று வெளியே எறியும் ஒரு காகிதத்துக்குள் அழகான உருவம் ஒன்று இருக்கிறது. அது ஒரு வண்ணத்துப்பூச்சியாக பறக்கிறது. அழகிய மலராக மலர்கிறது. காகிதம் மடிந்து ஒரு எலியாக, கொக்காக பிறக்கிறது. காகிதம் சிற்பமாக உருவானவுடனே அது மூச்சுவிடுகிறது, சிரிக்கிறது, நடனமாடுகிறது. அந்த விந்தையை நீங்களே செய்து பார்க்க முடியும். உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க இதைக் கற்றுக் கொடுங்கள். ஒருவேளை நாம் அதைச் சரியாக உணர்ந்து கொண்டால் காகிதங்களைக் காதலிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்