வசீகரிக்கும் இயற்கை வண்ண ஓவியங்கள் - நீலகிரியில் அசத்தும் ”குரும்பர்” ஓவியர்

By ஆர்.டி.சிவசங்கர்


கோத்தகிரி: குரும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்களை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன அவர்களது ஓவியங்கள்.

நீலகிரி மாவட்டத்தில் ஆறு பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் குரும்பரின மக்கள் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள். நாகரீக மாற்றத்தால் பலரும் ஓவியக் கலையை கைவிட்டதால், குரும்பர் பழங்குடியின மக்களின் கலை அழிவின் விளிம்பில் உள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கோழிக்கரையை சேர்ந்த கிருஷ்ணன், பாவியூரை சேர்ந்த பாலசுப்ரமணி உள்ளிட்டோர் மட்டுமே குரும்பர் இன ஓவியக் கலையை தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர்.

கோத்தகிரியில் சோலூர் மட்டத்துக்கு அருகே உள்ள பாவியூரை சேர்ந்த குரும்பர் இன ஓவியர் பாலசுப்ரமணி கூறியதாவது: ஆதிவாசிகளுக்கு ஓவியங்கள் வரையும் பழக்கம் இயல்பாகவே இருக்கும். குகைகள், மலைப்பாறைகளில் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். கோயில் திருவிழா, பண்டிகையின் போது உறவினர்களையும், நண்பர்களையும் வரவேற்கும் விதத்தில் வீட்டில் உள்ள சுவரில் சித்திரங்கள் வரைவார்கள். நாகரீக மாற்றத்தால் பலரும் ஓவியம் வரைவதை நிறுத்திக்கொண்டனர். தற்போது என்னுடன் இணைந்து என் மகள் கல்பனா, உறவினர் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஓவியங்கள் வரைந்து வருகிறோம்.

இயற்கை வண்ணம்: நாங்கள் ஓவியம் வரைய பயன்படுத்தும் வண்ணங்கள் இயற்கையானவை. ஓவியங்களை முறையாக பராமரித்தால், அழிவே இல்லை. வேங்கை மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினை பதப்படுத்தி, தண்ணீர் சேர்த்தால் பழுப்பு நிறம் கிடைக்கும். எங்களின் பெரும்பாலான ஓவியங்களுக்கு பழுப்பு நிறமே சேர்க்கப்படும். இலைகளின் பச்சை நிறத்துக்கு சில இலைகளையே பிழிந்து சாறெடுத்து பயன்படுத்துகிறோம். மிகப்பெரிய ஓவியங்களைத் தவிர, மற்ற அனைத்து ஓவியங்களையும் ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே விற்கிறோம்.

பெரும்பாலான குரும்பர் இன மக்கள் தங்களது அன்றாடத் தேவைக்கே ஓவியங்களை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது எங்களைப் போன்றே மற்றவர்களும் ஓவியம் வரைந்து, அதை குரும்பர் இன மக்களின் ஓவியம் எனக்கூறி முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர். எங்கள் ஓவியங்களை விற்பதற்காகவே நாங்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வோம். அதில்தான் எங்களது இயற்கை வண்ண ஓவியங்களை வாங்க முடியும். எங்கள் ஓவியத்தை விற்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE