பம்பை முதல் சந்நிதானம் வரை: சபரிமலை கள நிலவரம் என்ன? - நேரடி விசிட் அனுபவம்

By எல்லுச்சாமி கார்த்திக்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் லட்சோப லட்ச பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, ஐயப்பனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் கோயில் நடை திறக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் கடந்த வாரம் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இது குறித்த செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தன. பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசிக்க சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். அது தவிர சபரிமலை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதன் காரணமாக பக்தர்கள் சபரிமலை செல்லாமல் சொந்த ஊர் திரும்பியதாகவும் செய்தி வெளியானது. இந்தச் சூழலில், அண்மையில் சபரிமலை சென்று வரும் வாய்ப்பு கிட்டியது. அதன் ஊடாக அங்கு தற்போது நிலவும் கள நிலவரத்தை அப்படியே பதிவு செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

அனைத்து பக்தர்களையும் போலவே சபரிமலை செல்லும் வரை கூட்டம் எப்படி இருக்கும் என்ற பதற்றம் இருந்தது. அதற்கு காரணம் நாம் கண்ட, படித்த செய்திகள் தான். முன்கூட்டியே ஆன்லைனில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க முறையாக பதிவு செய்து இருந்தோம். கூட்ட நெரிசலை திறம்பட கையாளும் நோக்கில் கடந்த 2013-ல் கேரள காவல் துறை கொண்டு வந்த திட்டம் இது. அதோடு உள்ளூரில் உள்ள பத்திரிகை நண்பரிடம் விசாரித்ததில் கூட்டம் கட்டுக்குள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். பேருந்தில் பயணித்தபோது பெரும்பாலான சாமிகள் பேசிக்கொண்டது கூட்டம் குறித்துதான். தங்களுடன் வரவேண்டிய சிலர் யாத்திரையை தவிர்த்துவிட்டதாகவும் சொல்லி இருந்தனர்.

காலை 7 மணி அளவில் பம்பை சென்றோம். வழக்கமாக நிலக்கல்லில் இருந்து கேரள அரசு பேருந்து மூலமாகவே பக்தர்கள் சென்று வர அனுமதிக்கப்படுவது வழக்கம். கேரளாவில் ஏற்பட்ட 2018 வெள்ளத்துக்கு பிறகு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. பம்பையில் பார்க்கிங் வசதி இல்லாதது இதற்கு ஒரு காரணம். இதன் காரணமாக நடப்பு சீசனில் நிலக்கல்லில் பக்தர்கள் செல்லும் வாகனங்களை நிறுத்துவது, அங்கிருந்து பம்பை வந்து செல்வதில் சிக்கல் நிலவியது. இதனால் போக்குவரத்து முடங்கியதாக தகவல். ஆனால், இப்போது பக்தர்கள் பயணிக்கும் வாகனங்கள் பம்பை வரை சென்று, அவர்களை டிராப் செய்துவிட்டு, நிலக்கல் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. நாம் கவனித்த வரை எல்எம்வி (இலகுரக நான்கு சக்கர வாகனங்கள்) அனுமதிக்கப்படுகின்றன. இது தவிர தமிழகத்தில் இருந்து பம்பை வரும் தமிழக அரசுப் பேருந்துகள், கேரள அரசுப் பேருந்துகள் டிராப் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், பக்தர்கள் மீண்டும் நிலக்கல் திரும்ப கேரள அரசு பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டி உள்ளது.

பம்பை: நீண்ட நேர வரிசையில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள் என்ற செய்தி பக்தர்களை லேசாக அச்சுறுத்தி உள்ளது. அதன் காரணமாக பம்பையில் இறங்கியவுடன் பாய்ந்து ஓடும் ஆற்று நீரில் வேக வேகமாக குளியலை முடித்துக் கொண்டு அனைத்து சாமிகளும் மாமலை சபரியை நோக்கி விரைகின்றன. கன்னிமூல கணபதியை வணங்கி விட்டு, தேங்காய் உடைத்து, ஆன்லைன் முன்பதிவு டோக்கனை ஸ்கேன் செய்து கொண்டு நடையை தொடர்ந்தோம். இங்கு நேரடி முன்பதிவு செய்வதையும் பார்க்க முடிந்தது. அதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்.

நீலிமலை மற்றும் அப்பாச்சி மேட்டை கடந்து மரக்கூடம் அடைந்தோம். இந்த வழியில் செல்லும் நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்த பாதிப்பு உள்ள பக்தர்கள் சற்று நேரம் இளைப்பாறி செல்வது நல்லது என பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மரக்கூடத்தை அடைந்ததும் அங்கிருந்து பக்தர்கள் அனைவரும் சரங்குத்தி (பழைய) வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நாம் கவனித்ததில் மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்கள் என யாருக்கும் இதில் சலுகை இல்லை. முன்பு இங்கிருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சுவாமி அய்யப்பன் சாலை வழியாக (டிராக்டர் செல்லும் பாதை) அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பம்பையில் இருந்து மரக்கூடம் வரை நிதானமாக நடந்தால் கூட 40 நிமிடத்தில் செல்ல முடிகிறது. வழியில் அவசர மருத்துவ சிகிச்சை வசதிகள், கொதிக்க வைக்கப்பட்ட மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது.

நடப்பந்தல்: மரக்கூடத்தில் இருந்து சரங்குத்தி வழியாக சந்நிதானத்துக்கு முன்பு உள்ள நடப்பந்தலை அடைய அதிகபட்சம் 50 நிமிடங்கள் (நாம் சென்றபோது இருந்த நிலவரம்) ஆகிறது. இந்த வழியில் பக்தர்கள் அதிகம் இருந்தால் அவர்களை தங்க வைக்கவும் கம்பார்ட்மென்ட் போல அறைகள் உள்ளன. இதில் கழிப்பறை வசதி உள்ளது. அதோடு எல்இடி திரையில் தரிசனம் குறித்த அப்டேட் வழங்கப்படுகிறது. இந்தப் பகுதியில் காவலர்கள் அதிகம் உள்ளனர். நடப்பந்தலை அடைந்ததும் பக்தர்கள் அனைவரும் வெவ்வேறு வரிசைகளில் பிரித்து அனுப்பப்படுகின்றனர். இதில் இருமுடியுடன் வரும் மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்கள் வலது பக்கத்தில் கடைசியில் உள்ள வரிசையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள்படி ஏறவும் தனி வரிசை உள்ளது சிறப்பு. நடப்பந்தலில் வரிசையில் நின்றால் அதிகபட்சம் 50 முதல் 60 நிமிடங்களுக்குள் பதினெட்டாம் படியில் ஏற முடிகிறது. இங்கு மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்கப்படுகிறது.

18-ம் படியின் இருபுறமும் 7 காவலர்கள் என 14 பேர் நிற்கிறார்கள். இவர்கள் புனித படிகளை பக்தர்கள் விரைந்து கடக்க உதவுகின்றனர். அதனை மூத்த காவலர் படிக்கு மேல் இருந்து கவனிக்கிறார். சராசரியாக 1 நிமிடத்துக்கு 75 பக்தர்கள் 18-ம் படியை கடந்து வருகின்றனர். படி ஏறியதும் பக்தர்கள் வழக்கம்போல சந்நிதானத்துக்கு இடது பக்கம் உள்ள பகுதியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் நின்று 10 முதல் 15 நிமிடங்களில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க முடிகிறது. நாம் கவனித்த வரை கடைசி வரிசையில் வரும் பக்தர்கள் துவஷஸ்தம்பத்துக்கு உள்ள கோயில் கோபுரத்தின் வழியில் சற்று நேரம் நின்று சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதிகாலை 3.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோயில் நடை காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 முதல் இரவு 11 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல தற்போது நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகையாளர் நம்மிடம் தெரிவித்தார். அதனால் பக்தர்கள் நீண்ட நேரம் எங்கு அடைத்து வைக்கப்படுவதில்லை. நடை அடைத்து இருக்கும் நேரத்தில் 18-ம் படியில் ஏறும் பக்தர்கள் மட்டும் நடை திறந்ததும் சுவாமி தரிசனம் செய்ய ஒரு இடத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. மற்றபடி பக்தர்கள் நீண்ட நேரம் எங்கும் காக்க வைக்கப்படுவது இல்லை (இது நாம் சென்ற போது இருந்த நிலவரம்). சபரிமலையில் பணியில் இருக்கும் தூய்மை பணியாளர்களிடம் விசாரித்ததில் கடந்த வாரம் கூட்டம் அதிகம் என தெரிவித்தார்கள்.

தரிசனம் முடித்த பக்தர்கள் அனைவரும் விரைந்து பம்பை செல்லுமாறு அறிவுறுத்துப்படுகிறது. சுவாமி அய்யப்பன் சாலை (டிராக்டர் பாதை) வழியாக மட்டும் பம்பை திரும்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வழியாக பம்பை திரும்ப 90 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. மலை ஏறவும், இறங்கவும் முடியாத பக்தர்கள் டோலி மூலம் செல்கின்றனர். அதற்கான கட்டணம் மற்றும் கண்காணிப்பை காவல் துறை நெறி செய்துள்ளதை கவனிக்க முடிந்தது. பம்பை வந்ததும் கேரள அரசுப் பேருந்து மூலமாக மட்டுமே நிலக்கல் செல்ல முடியும். அங்கிருந்து அவரவர் பயணித்து ஊர் திரும்பலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE