மதுரை: தொன்மையான கட்டிடக்கலையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட மதுரை புது மண்டபத்தின் பழமை மாறாமல் அதை புனரமைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்குக் கோபுரத்துக்கு நேர் எதிரே உள்ளது புதுமண்டபம். திருமலைநாயக்கர் காலத்தில் கோடை காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக கட்டப்பட்டது இந்த மண்டபம். வசந்த விழாக் கொண்டாடப்படும்போது இந்த மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணீர் நிரப்பி வைக்கப்படும். அந்தத் தண்ணீரில் பட்டுச்சிதறும் காற்று தென்றல் காற்றாக மாறி வசந்த மண்டபத்துக்குள் வீசும்போது அங்கே வசந்த விழாவைக்காண அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு வசந்தமே மேனியை வருடுவதுபோன்று சுகமளிக்கும் என்றும், இதனால், மண்டபத்தைச் சுற்றி தண்ணீர் தேக்கப்பட்டதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதுமண்டபத்தில் ஆயிரம் கால் மண்டபம்போல் வரிசையாக 125 கலைநயமிக்க தூண்கள் உள்ளன. அந்தத் தூண்களில் திருமலைநாயக்கர் காலத்தில் தலைசிறந்து விளங்கிய சிற்பிகளைக் கொண்டு கலைநயமிக்க சிற்பங்களை வடித்துள்ளனர். யானைகளுடன் கூடிய யாளி, குதிரை வீரர்கள், சுந்தரேசுவரர், துவார பாலகர்கள், வியாக்கிரபாதர், நாயக்க மன்னர்கள் உள்ளிட்ட 28 வகையான அழகு சிற்பங்கள் இந்த புதுமண்டபத்தில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்கள் புதுமண்டபத்துக்கு அழகோடு சிறப்பும் சேர்ப்பதால் தமிழக கட்டிடக்கலைக்குச் சிறந்த சான்றாக இன்றளவும் திகழ்கிறது. காலப்போக்கில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்காக புதுமண்டபத்தில் பூஜை பொருட்கள், பாராம்பரிய பழங்காலப் பொருட்கள் விற்பதற்கான கடைகள் அமைத்துக் கொள்ள வியாபாரிகளுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டதால் புதுமண்டபம் ஒரு பழங்கால வணிக வளாகம்போல் காணப்பட்டது. வியாபாரிகள் புதுமண்டபத்தின் அற்புதத்தையும், காணக்கிடைக்காத சிற்பங்களின் கலைநயத்தையும் தெரியாதநிலையில் சிற்பங்கள், தூண்கள் மீது பொருட்களைத் தொங்கவிட்டனர். அதனாலே, புதுமண்டபத்தின் அழகும், அதன் சிறப்பும் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாமல் போனது. அதைப்பார்த்து கவலையடைந்த தொல்லியல் ஆர்வலர்கள், பக்தர்கள், புதுமண்டபத்தை மீட்டு அதனை வரலாற்றுக் காட்சிக்கூடமாக மாற்றி அதன் பாரம்பரியத்தையும், சிற்பங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து மாநகராட்சி உதவியுடன் புதுமண்டபத்தில் வியாபாரம் செய்த வியாபாரிகளை வெளியேற்றி, அவர்களுக்கு குன்னத்தூர் சத்திரத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன. அதன்பிறகு இடையில் சில காலம் எந்த நோக்கத்துக்காக வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனரோ அந்த புனரமைப்புப் பணிகள் புதுமண்டபத்தில் நடக்கவில்லை. புதுமண்டபம் பூட்டியே வைக்கப்பட்டிருந்தது. இது மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையல், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தொல்லியல் துறை அனுமதியுடன் பழமை மாறாமல் புதுமண்டபத்தையும், அதன் சிற்பங்கள், தூண்களையும் பராமரிப்புக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்ததால் ஏராளமான புரதானச் சிலைகள் சேதமடைந்துள்ளன. இதுபோன்ற சிற்பங்களை மீண்டும் உருவாக்க முடியாது என்பதால், சிலைகளை அதன் பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிலைகளுக்குத் தொல்லியல் துறை பரிந்துரைத்த அறிவியல் நுட்பங்களைக் கொண்டு மெருகேற்றும் பணிகள் நடக்கின்றன. புனரமைப்புப் பணிகள் நடப்பதால் தற்போது வெளியாட்கள் யாருக்கும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
புனரமைப்புப் பணிகள் முடிந்தபிறகு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் சிறப்புகளையும், வரலாற்றுச் சுவடுகளையும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள பழங்காலச் சிற்பக் காட்சிக்கூடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. அதற்கான திட்ட மதிப்பீடு இன்னும் தயாராகவில்ல. புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு மற்ற திட்டங்களும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு ஓரிரு ஆண்டில் மக்கள் பார்வைக்காக புதுமண்டபம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சித்திரைத் திருவிழாவுக்குள் மக்கள் பார்வைக்கு புதுமண்டபத்தைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்படுகிறது. புது மண்டபம் திறக்கப்படும் நாளை மதுரையில் வசிப்பவர்கள் மட்டுமின்றி மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
17 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago