கே.அம்மாபட்டி கிராம மக்களை வாழ வைக்கும் ‘துடைப்பம்’ தயாரிப்பு தொழில்!

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: நத்தம் அருகே உள்ள கே.அம்மாபட்டி கிராம மக்களுக்கு துடைப்பம் தயாரிப்பு தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இங்கிருந்து டன் கணக்கில் துடைப்பம் தயாரித்து, வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முன்பு தென்னை மரங்கள் அதிகம் இருந்ததால், அதை சார்ந்த தொழில்களில் பலர் ஈடுபட்டனர். காலப்போக்கில் தென்னை மரங்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கின. இதனால் பலர் மாற்று வேலைகளுக்குச் சென்றனர். ஆனால், தென்னங்கீற்றிலிருந்து துடைப்பம் தயாரிக்கும் தொழிலை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நத்தம் அருகேயுள்ள கே.அம்மாபட்டி கிராமத்தினர் இன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.

கே.அம்மாபட்டியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள துடைப்பங்கள்.

தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ள ஆத்தூர், அய்யம்பாளையம் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளிலிருந்து தென்னங்கீற்றுகளை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அதை பக்குவமாக சீவி துடைப்பத்தை தயாரிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள பலரின் முக்கிய வாழ்வாதாரமாக இத்தொழில் உள்ளது. குறிப்பாக கிராமப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொன்னுச்சாமி கூறியதாவது: இங்கு ஆண்டு முழுவதும் துடைப்பம் தயாரிக்கும் தொழில் நடைபெறுகிறது. எங்களுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கிடைக்கும் ஆர்டர்களை விட, வட மாநிலங்களிலிருந்துதான் அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இங்கிருந்து டன் கணக்கில் துடைப்பங்களை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். குறிப்பாக டெல்லியில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ‘துடைப்பம்’. அதனால் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும்போதெல்லாம் அக்கட்சி நிர்வாகிகளிடமிருந்து அதிக அளவில் துடைப்பம் கேட்டு ஆர்டர்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE