பழநி விவசாயிகளை அச்சுறுத்தும் ‘அமெரிக்கன் படைப்புழு’ - வேளாண் துறை நடவடிக்கை எடுக்குமா?

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி பகுதியில் மக்காச்சோள பயிர்களை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவால் விவசாயிகள் அச்சுறுத்தலில் உள்ளனர். மகசூல் பாதிப்பை தடுக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. பழநி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஹெக்டேரில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பழநி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோள சாகுபடியில் பரவலாக அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இவ்வகை புழுக்கள் பயிரின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதலை ஏற்படுத்துவதால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அமெரிக்கன் படைப்புழுக்களை அழிக்க வேளாண் துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராமசாமி

இதுகுறித்து கணக்கன்பட்டி விவசாயி ராமசாமி கூறியதாவது: மக்காச்சோள பயிர்கள் நடவு செய்த ஆரம்ப நிலையில் இருந்தே படைப்புழு தாக்குதல் காணப்படு கிறது. வளர்ச்சி தருணத்தில் உள்ள செடியின் இலைகளை இப்புழுக்கள் சேதப்படுத்துகின்றன. செடியின் தண்டு பகுதியில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. சில நாட்களில் ஆயிரக்கணக்கில் பெருகி பயிரை முழுவதுமாக இப்புழுக்கள் சேதப்படுத்தி விடுகின்றன. மொத்தம் 10 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள் ளேன். தற்போது வரை ரூ.1.50 லட்சத்துக்கு மேல் மருந்து வாங்கி தெளித்தும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை.

அமெரிக்கன் படைப்புழு

பயிர்களை எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர். வேளாண் துறையினர் கள ஆய்வு செய்து படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE