‘போலீஸ், திருடன்' விளையாடினோம்: உயிர் தப்பிய சுரங்க தொழிலாளர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பெரும் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு உள்ளனர்.

சுரங்கப் பாதையில் சிக்கியிருந்தபோது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது குறித்து ஊடகங்களிடம் தொழிலாளர்கள் விவரித்துள்ளனர். பிஹாரை சேர்ந்த தொழிலாளி அகமது கூறும்போது, ‘‘சுரங்கப் பாதையில் 4 அங்குல தண்ணீர் குழாய் இருந்தது. முதல் 8 நாட்கள் அந்த குழாய் வழியாகவே வெளியில் இருந்தவர்களிடம் பேசினோம். சுரங்கத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த மின்விநியோக கட்டமைப்புகள் பாதிக்கப்படவில்லை. சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்ததால் உட்பகுதியில் ஆக்சிஜன் போதுமானதாக இருந்தது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆழமான குழி தோண்டி இயற்கைஉபாதைகளை கழித்து மூடினோம்’’ என்றார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அங்கித் கூறும்போது, ‘‘வாழ்வா, சாவா என்ற நிலையில் பரிதவித்தோம். என்ன நடந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்வோம் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டோம். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினோம்.

எங்களிடம் டைரி இருந்தது. அந்த டைரியில் இருந்து தாள்களை கிழித்து துண்டு சீட்டுகளில் ராஜா,ராணி, மந்திரி, திருடன், போலீஸ் என்று எழுதி குலுக்கி போடுவோம். ஒவ்வொருவரும் ஒரு துண்டு சீட்டை எடுப்போம். திருடனை கண்டுபிடிப்போருக்கு அதிக புள்ளிகள்வழங்குவோம். இந்த விளையாட்டை விளையாடி பொழுதை போக்கினோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE