நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 நாட்கள் முல்லை திருவிழா

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: முல்லை நிலங்கள் பரப்பளவு குறைந்துவருவது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று தொடங்கி 4 நாட்களுக்கு முல்லைத் திருவிழா நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன் கூறியதாவது: தென் தமிழகத்தில் புல்வெளி மற்றும் புதர்க்காடுகள் கொண்ட முல்லை நிலப்பரப்பு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கால்நடை மேய்ச்சலுக்கு புல்வெளிகளையே மக்கள் நம்பியிருக்கின்றனர். தென் தமிழகத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக புல்வெளிகள் இழப்பு காரணமாக பல்லுயிர் பெருக்கம், கால்நடை வளர்ப்போர் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

கடந்த 2010-ம் ஆண்டின் தரிசுநில வரைப்படங்களின் படி, தமிழ்நாடு கடந்த 2003 மற்றும் 2006 -க்கு இடையில் 974 ஹெக்டேர் திறந்தவெளி புதர் மற்றும் 926 ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. புல்வெளிகளின் நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த உலகளாவிய அக்கறையை அங்கீகரித்து, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை வரும் 2026-ம் ஆண்டை சர்வதேச புல்வெளிகள் மற்றும் மேய்ச்சல் ஆண்டாக அறிவித்துள்ளது.

அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், தமிழ்நாடு வனத்துறை, திருநெல் வேலி மாவட்ட நிர்வாகம், நெல்லை நீர்வளம், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து முல்லைத் திருவிழாவை 4 நாட்கள் நடத்துகின்றன. இன்று தொடங்கி 5-ம் தேதி வரை இந்த விழா திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

நாளை காலை 7 மணிக்கு வல்லநாட்டில் கீதாரியின் அனுபவ பகிர்வு, வரும் 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ‘வளங்குன்றா மேய்ச்சல் காடுகளுக்கு சமத்துவமான தீர்வு’ என்ற தலைப்பில் பயிலரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. வரும் 5-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் பூனைப் பருந்து பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி பட்டறையும், அடுத்த நாள் மாலை 5 மணிக்கு தருவை, ராதாபுரம், நாங்குநேரி பகுதிகளில் பூனைப் பருந்து பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE