வெள்ளை உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்: மருத்துவர் கு.சிவராமன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் புனிதவளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

4-ம் நாள் நிகழ்ச்சியில், ‘அன்னம் அக்கறை = ஆரோக்கியம்’ என்ற தலைப்பில், மாநில திட்டக் குழு உறுப்பினரும், சித்த மருத்துவருமான கு.சிவராமன் பேசியது: நம் நாட்டில் இயற்கையாக விளையும் பொருட்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்து தயாரித்து, காப்புரிமை பெறுகின்றனர். நாம்தான் அதை நிறைய செய்ய வேண்டும். குறிப்பாக, கரோனா காலத்தில் தடுப்புமருந்தாக பயன்படுத்தப்பட்ட கபசுர குடிநீர் போன்றவை நம்மிடத்திலேயே உள்ளன.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மெல்ல, மெல்ல நோய்கள் எட்டிப்பார்க்கும். அதைத்தடுக்க, கட்டுப்படுத்த நாம் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்தாக வேண்டும். இட்லி போன்ற கார்போ ஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளைத் தவிர்த்து, புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காலையில் சுண்டல், முட்டை, பிற்பகல் கொஞ்சம் சாதம்,நிறைய காய்கறிகள், இரவில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

இரவு 7 மணிக்குள் இரவு உணவை குறைவாக உட்கொள்ள வேண்டும். இவை ரத்தத்தில் சர்க்கரை சேர்வதைத் தடுக்கும். காலையில் டீ, காபியை தவிர்த்து, ஆவாரம்பூ சாறு, நெல்லிக்காய் ஜூஸ், கரிசாலை கசாயம் போன்றவற்றை குடிக்கவேண்டும். இது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக உருவாக்கும். வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, நாட்டுச் சர்க்கரையை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவத் துறையில் 2050-ல் மருந்து உற்பத்தி, பயன்பாடு அதிகம்இருக்கும் என்பதால், இறப்பு என்பதேநமது தேர்வாகத்தான் இருக்கும். அப்போது, மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 85 வயதாக இருக்கும். நோய்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். அதைத் தடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். சர்க்கரை, உப்பு, மைதா போன்ற வெள்ளை உணவுப் பொருட்களைத் தவிர்த்து, கருப்புக் கவுனி அரிசி, பழுப்பு நிறத்தில் உள்ள சிறு தானியங்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE