திருச்சியில் திரளும் வாசகர்கள்: வசீகரிக்கும் புத்தகத் திருவிழா

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: டிஜிட்டல் யுகத்தில் மக்களை வசீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், திருச்சி புத்தகத் திருவிழா அனைவரது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நவ.23-ம் தேதி தொடங்கியது. டிச.4-ம் தேதி வரை 12 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

160 அரங்குகளுடன் அமைந்துள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிக்கு வைத்துள்ளன. தவிர, திருச்சி மாநகராட்சி, பள்ளிக்கல்வித் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், இல்லம் தேடி கல்வி, தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய அரசு சார்ந்த துறைகள், கழகம் ஆகியவற்றின் அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.

திருச்சி மாவட்ட படைப்பாளர்கள் அலகுக்கு என தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்விதக் கட்டணமுமின்றி சேவை அடிப்படையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்துலக படைப்பாளர்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 30 படைப்பாளர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். புத்தகக் கண்காட்சிக்கு நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் வாசகர்கள் என சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தங்களது அறிவுப்பசிக்கேற்ப நூல்களை வாங்கிச் செல்கின்றனர்.

மேலும், சிந்தனை அரங்கம், கோளரங்கம், அறிவியல் மற்றும் விண்வெளி கண்காட்சி அரங்கம், சிறார் அரங்கம், செல்ஃபி பாயின்ட் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் கல்வி கற்கலாம் என்ற அரங்கில், பாரம்பரிய விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாசிக்க மட்டும் அல்ல புசிக்கவும் 10-க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. இவை போன்ற ஏற்பாடுகள் சிறுவர்கள் முதல் புத்தகக் கண்காட்சிக்கு வரும் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் உள்ளதால், இந்த புத்தகத் திருவிழா அனைவரது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து திருச்சி புத்தகத் திருவிழாவுக்கு வந்தவர்கள் தெரிவித்தது:

ஹரிணி

அய்யலூர் ஹரிணி: எனக்கு தமிழ் சரியாக தெரியாது என்றாலும், எனது தாத்தா திருக்குறள் முருகானந்தம் தூண்டுதலின் பேரில், 9-ம் வகுப்பு முதல் படிக்கத் தொடங்கினேன். தற்போது வரை 6 நாவல்கள் படித்துள்ளேன். புத்தகங்கள் தொடர்ந்து வாசிப்பதால், வாசிப்புத் திறன், உச்சரிப்பு திறன் மேம்படுவதுடன், பல்வேறு வார்த்தைகளுக்கான பொருளையும் அறிய முடியும். புத்தகங்கள் மட்டும் இல்லாமல் சிந்தனை அரங்கம், சிறார் அரங்கம் என பல்வேறு செயல்பாடுகள் அடங்கிய அரங்குகளும் இடம் பெற்றுள்ளது என்னை போன்ற இளையவர்களை கவர்ந்துள்ளது.

ராஜ்குமார்

டாக்டர் ராஜ்குமார்: பார்க்க பிரம்மாண்டமாக இருக்கிறது. சட்டப்புத்தகத்துக்கு என தனி அரங்கு அமைத்துள்ளது பயனுள்ளதாக இருக்கிறது.

சவுமியா

டாக்டர் சவுமியா: நவீன டிஜிட்டல் யுகத்தில் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவது இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் தான். குழந்தைகளை செல்போன், டிவி, லேப்டாப் ஸ்க்ரீன்களிலிருந்து (திரைகள்) பாதுகாக்க புத்தக வாசிப்பு மட்டுமே சிறந்த நண்பன், சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அறிவியல், ஆங்கிலம், சூழலியல் எனத் தனித்தனியாக புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

தன்யா

ஸ்ரீரங்கம் தன்யா: புத்தக விலை அதிகமாக உள்ளது. ஜப்பானிய மாங்கா புத்தகங்கள் (கார்ட்டூன் சித்திரங்கள் இடம் பெற்றவை) டெத்நோட், நரூட்டோ, ஜென்ஷா போன்ற புத்தகங்கள் அதிகளவில் உள்ளது ஆச்சர்யத்தை தருகிறது. ஆங்கிலப் புத்தக அரங்கங்கள் குறைவாக உள்ளன. பிற மொழி புத்தகங்களுக்கும் அரங்கங்கள் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

சந்திரசேகரன்

சந்திரசேகரன்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் மிகவும் அருமையாக உள்ளது. படிக்காமல் விடுபட்ட கட்டுரைகளை புத்தகமாக வாங்கி படிக்க வாசகர்களுக்கு வசதியாக இருக்கிறது.

கேரி கேட்சர் ஆர்ட்: இங்கு அமைக்கப்பட்டுள்ள ஓர் அரங்கில் சீனாவில் பிரபலமான கேரி கேட்சர் கார்ட்டூன் ஓவியங்கள் 2 நிமிடங்களில் வரைந்து தரப்படுகின்றன. இந்த அரங்குக்கு செல்பவர்கள் 2 நிமிடங்கள் அமர்ந்து தங்களது கேரி கேட்சர் கார்ட்டூன் ஓவியங்களை பெற்றுச் செல்கின்றனர். 2 நிமிடங்களில் விறுவிறுப்பாகவும், அநாயசமாகவும் கேரி கேட்சர் கார்ட்டூன் வரைந்து தருகிறார் கார்ட்டூனிஸ்ட் ஜேக்கப் பால்.சிறுவனின் உருவத்தை கேரி கேட்சர் கார்ட்டூனாக மாற்றும் கார்ட்டூனிஸ்ட்.

சிறுவனின் உருவத்தை கேரி கேட்சர்
கார்ட்டூனாக மாற்றும் கார்ட்டூனிஸ்ட்.

சிறைவாசிகளுக்கு புத்தக தானம்: சிறைகள் மற்றும் சீர்aதிருத்தப் பணிகள் துறை சார்பில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கில் மிகப்பெரிய புத்தக உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வதற்காக அந்த உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 88 பேர் 350 புத்தகங்களை உண்டியலில் தானமாக வழங்கி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE