1000 ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டில் ஸ்ரீவில்லி. பராங்குசப்பேரேரி ஏழு கண் மடை | உலக மரபு வாரம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீ வில்லிபுத்தூர்: உலக மரபு வாரம் நவ.19 முதல் 25 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பாண்டியர்களின் நீர்ப்பாசன முறைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் உள்ள பராங்குசப்பேரேரி ஏழு கண் மடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கிருந்து திருமுக்குளம் உட்பட 15 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கண்மாயில் இருந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் பகிர்ந்து அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ஏழு கண் மடை 1000 ஆண்டுகளை கடந்து பாண்டியர்களின் நீர்ப்பாசன முறைக்கு சான்றாக இன்றும் கம்பீரமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியருமான போ.கந்தசாமி கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பெரிய கண்மாய் நீர்ப்பாசன முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதை விளக்கும் கல்வெட்டுகளும், பராங்குசப்பேரேரி வட்டக்கிணறு ஏழு கண் மடையும் பாண்டிய நாட்டு நீர்ப்பாசன முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

போ.கந்தசாமி

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில் நரசிம்மர் சந்நிதியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றில் ஸ்ரீவில்லிபுத்தூரை பராங்குசப்புத்தூர் என்று அழைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. பராங்கு சப்புத்தூர் பெருங்குளம் என்று குறிப்பிடப்படுவது தற்போதைய வில்லிபுத்தூர் பெரியகுளம் ஆகும். ஆன்மர் நாட்டுக் கிழவனான புனல்வேலியைச் சேர்ந்த சங்கரன்மூரி அருளாக்கி என்பவர் குளத்தைச் சீர்படுத்தி முறைப்படுத்தியதாகவும் கல்வெட்டு செய்தி குறிப்பிடுகிறது. ஆன்மர் நாடு புனல்வேலி என்பது தற்போதைய ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி என்ற ஊர். அப்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் மகா சபையினர் ஒன்று கூடி ஆன்மர் நாட்டுக் கிழவனை பாராட்டி பாசன வாய்க்காலை அருளாக்கி பெருமடை என்றும் பெயரிட்டு உள்ளனர்.

ஆன்மர் நாட்டுக் கிழவனையும், பாண்டியரின் பெருமையையும் விளக்கும் பாடல்களும் இக்கல்வெட்டின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த வட்டெழுத்து கல்வெட்டு முற்காலப் பாண்டிய மன்னனான இரண்டாம் ராஜசிம்மன் காலத்திய கல்வெட்டாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் கருவறை தெற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டொன்றில் ‘எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூர் உடையார் திருக்கற்றளீசுவரமுடைய நாயனார் கோயிலுக்கு தானமாக வழங்கிய இவ்வூர் பரங்குசப்பேரேரியிலே தேவதான நிலத்திலேயே' என்று குறிப்பிடுவதில் இருந்து, கோயிலுக்குரிய தேவதான நிலங்கள் இவ்வேரியின் நீர் பாசனத்துக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

முற்கால பாண்டிய மன்னர்களில் செழியன் சேந்தனுக்கும், கோச்சடையன் இரணதீரனுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்தவனாகிய அரிகேசரி பராங்குச மாறவர்மனாகிய நின்றசீர் நெடுமாறனை (கி.பி.624-672) இரண்டாம் ராஜசிம்ம பாண்டியனின் சின்னமனூர் செப்பேடு 'வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற் சங்கரமங்கைப் பல்லவனையும் புறங்கண்ட பரங்குசன்' என குறிப்பிட்டிருப்பதில் இருந்து இம்மன்னனின் பெயராலேயே பரங்குசப்புத்தூர் என்ற ஊர்ப்பெயரும், பராங்குசப்பேரேரி என்ற குளப்பெயரும் வழங்கி வந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் வேதாச்சலம் மற்றும் சாந்தலிங்கம் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

ஏழு கண் மடையின் நடுவே உள்ள
வட்டெழுத்து கல்வெட்டு.

முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் பாண்டிய நாட்டின் உள்நாட்டு நிர்வாகத்தையும், அந்தந்த நாட்டு தலைவர்கள் அரசின் சார்பில் நீர்ப்பாசனக் குளங்களை சீர்படுத்தி வளப்படுத்தி உள்ளனர். ஆன்மர் நாட்டுத் தலைவனாக விளங்கிய ஆன்மர் நாடு கிழவன் சங்கரன்மூரி அருளாக்கியும் தனது நாட்டுக்கு வடக்கே இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெருங்குளத்தில் நீர்ப்பாசன சீர்திருத்தப் பணிகள் மேற்கொண்டுள்ளதையே வடபத்திரசாயி கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. முதலாம் ராஜராஜன் ஆட்சிக்கு வந்த 10-ம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் பெருங்குளத்தின் தெற்கு மடையும், அதன் கிழக்கே நீர் வெளியேறும் நீர்த்தொட்டியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ள செய்தியை ஏழு கண் மடை தொட்டியின் நடுவே அமைந்துள்ள வட்டெழுத்து கல்வெட்டும், கிரந்த கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன.

வட்டக்கிணறு போன்று அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டியின் நடுவே மடையிலிருந்து கரைக்கு அடியில் தூம்பு வழியாக வேகமாக நீர் வெளியேறும் போது நீரின் வேகத்தை தடுப்பதற்கு நடப்பட்ட தடைக்கல்லில் இந்த கல்வெட்டு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பெருங்குளத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையின் அடியில் நீர்ப்பாதையமைத்து கருங்கற்களை கொண்டு வடிவமைத்து தேவதான நிலத்தின் பல நூறு ஏக்கர் நிலத்தில் பாசனத்துக்கு உறுதுணையாக அமைந்திருந்தது.

அதோடு தாமரைத் தண்டின் மீது கூடிய விநாயகரின் புடைப்புச் சிற்பமும், நீர்த்தொட்டியின் மேல் புறம் கஜலட்சுமியின் அழகிய சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. பிற்காலப் பாண்டியர் காலத்திலும் ஏழு கண்மடை நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையை விரிவாக்கம் செய்தபோது, பழமையான பராங்குசப்பேரேரி ஏழு கண் மடைக்கு மேல் பாலம் அமைத்து உள்ளனர். தென்பாண்டி நாட்டில் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டையும், புடைப்புச் சிற்பங்களையும் கொண்ட நீர்ப்பாசன முறைக்கு சான்றாக விளங்கும் ஏழு கண் கிணறு மடை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்