போதை பழக்கத்தில் இருந்து விடுபட ஆன்மிகத்தின் வழிக்கு இளைஞர்கள் வர வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட ஆன்மிகத்தின் வழிக்கு இளைஞர்கள் வர வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், செய்தியாளர்களிடம் கூறும் போது, “உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக பக்தர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர். ஆன்மிகத்துக்கு முக்கிய தலமாக விளங்கக் கூடியது திருவண்ணாமலை. ஜோதி சுடராய் அண்ணாமலையார் காட்சி தருகிறார்.

ஜோதி ரூபமாக கடவுள் காணப்படுவது தமிழ் கலாச்சாரத்தில் கலந்துள்ளது. அண்ணாமலையை நோக்கி ஆன்மிக பக்தர்கள் வருகின்றனர். அனைத்து சாதியினரும், மதத்தினரும் ஒன்றாக இணைந்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான் ஆன்மிகத்தின் பொருள். பாரத நாட்டில் போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.

இதில் இருந்து விடுபட, ஆன்மிகத்தின் வழிக்கு இளைஞர்கள் வர வேண்டும். ஆறு, குளங்களை சுத்தமாக வைத்திருக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. பாரதத்தில் 75 நதிகளை புனரமைக்கும் பணி முழுமையாக நடைபெற்று முடிந்துள்ளது. நதிகள் இணைப்பு குறித்து துபாயில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உலகளவில் தண்ணீர் பிரச்சினை பெரியளவில் உள்ளது.

நதிகள் இணைப்பு மூலமாக, இதற்கு தீர்வு காணலாம். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுவோம்” என்றார். முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் சுவாமி தரிசனம் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE