வடசித்தூரில் மயிலந் தீபாவளி கோலாகலம்: 16 கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் நேற்று மயிலந் தீபாவளி கொண்டாடப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து தீபாவளியை கொண்டாடிவரும் இந்த பாரம்பரிய நிகழ்வில் சுற்று வட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சியிலிருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வடசித்தூர் கிராமம். தமிழகத்தில் இங்குதான் தீபாவளிக்கு அடுத்தநாள் மயிலந்தீபாவளி என்னும் பெயரில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

வடசித்தூர் கிராமத்தை சுற்றியுள்ள செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாட்டு வண்டி, இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றில் வந்து வடசித்தூரில் கூடினர். புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினர். இந்து, இஸ்லாமியர் இணைந்து மதம் பார்க்காமல் ஒரே குடும்பமாக மயிலந் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடினர். குழந்தைகள் விளையாடி மகிழ ராட்டினங்கள், இனிப்பு, பலகார கடைகள், பெண்களுக்கு வளையல் கடைகள், முதியோர்கள் கண்டு களிக்க ஒயிலாட்டம், மயிலாட்டம் என கொண்டாட்டம் களைகட்டியது. விதவிதமான பட்டாசுகளுடன், பலவிதமான உணவுகள் என நேற்று உற்சாகம் கரை புரள மயிலந் தீபாவளி கொண்டாடப்பட்டது.

இது குறித்து வடசித்தூரை சேர்ந்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவர் ஆனந்தன் கூறும்போது,‘‘இப்பகுதியில் வசித்த குறிப்பிட்ட சமூகத்தினர் செவ்வாய்க்கிழமை அசைவ உணவு உண்பதில்லை. 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளி செவ்வாய்க்கிழமையில் வந்துள்ளது. ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி தீபாவளிக்கு மறுநாள் மயிலந் தீபாவளியாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இப்படி உருவானதுதான் மயிலந்தீபாவளி. இந்த வழக்கத்தை இன்றளவும் இளைய தலைமுறைகளும் ஏற்று கொண்டாடி வருகின்றனர். சாதிமத வேறுபாடின்றி, பொதுவான திருவிழாவாக மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கிராமத்திலிருந்து வேறுபகுதிக்கு திருமணமாகி சென்ற பெண்கள், கணவர் வீட்டில் தீபாவளியை முடித்து விட்டு, பிறந்த வீட்டில் நடக்கும் மயிலந் தீபாவளிக்கு விருந்தினராக வருகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE