விவசாயிகளுக்கு புத்தாடைகள் வழங்கிய மதுரை சமூக சேவகி

By செய்திப்பிரிவு

மதுரை: தீபாவளியையொட்டி ஆத ரவற்றோர், சாலையோரவாசிகள், விவசாயிகள் ஆகியோரை தேடிச் சென்று புத்தாடைகளை வழங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி ரஞ்சிதாதேவி. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதாதேவி (44). இவர் கணவர் கண்ணனுடன் சென்னை கோயம்பேட்டில் வசித்து வருகிறார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைந்த பின்னர் அவர் மீதான ஈர்ப்பால் மரக்கன்றுகள் வழங்கத் தொடங்கினார். அரசுப் பள்ளி மாணவர்கள், ஆதரவற்றோருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தீபாவளி யையொட்டி ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள், உணவுப் பொருட்கள் வழங்கி வருகிறார்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ரஞ்சிதாதேவி கூறியதாவது: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைந்த பின்னர் அவர் எழுதிய நூல்களை படித்து அவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். அவரைப்போல் மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி ‘விருட்ஷா அமைப்பு’ சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கித் தருகிறோம். கலாம் பிறந்தநாள், நினைவு நாளில் மரக்கன்றுகள் வழங்குவதோடு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி வருகிறோம்.

மேலும் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது ஆதர வற்றோர், சாலையோர வாசிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், மளிகை பொருட்களை கடந்த 5 ஆண்களாக வாங்கித் தருகிறோம். மாணவர்களுக்கு மரக்கன்றுகள், விதைப்பென்சில், விதைப்பந்துகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தற்போது தீபாவளியையொட்டி ஆதரவின்றி இருப்போரை தேடிச்சென்று புத்தாடைகள், உணவு வழங்குகிறோம். வாடிப்பட்டி, குருவித்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள் வழங்கியுள்ளோம். நான் மதுரை சவுராஷ்டிரா பள்ளியில் தான் படித்தேன். அரசுப் பள்ளி மாணவர் களுக்கு உதவிகள் தேவைப்படின் எங்களை அணுகினால் உதவ தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE