விழுப்புரம் 30 | விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், விழுப்புரம் தொகுதிகள் ஏற்றம் பெறுமா... மாற்றம் வருமா?

By எஸ். நீலவண்ணன்

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக அத்தொகுதிகள் பெறத் தவறியது குறித்து பதிவிடுகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், மயிலம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் என 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

விழுப்புரம்: விழுப்புரம் நகர்ப்பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மின்நுகர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் பொய்யப்பாக்கம் அல்லது கா.குப்பம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். விழுப்புரம் சாலாமேடு, வழுதரெட்டி பகுதியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள், மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்க வேண்டும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி வளவனூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். வளவனூர் கடைவீதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். விழுப்புரம் நகரில் அமைந்துள்ள வி.மருதூர் ஏரி, குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. இதன் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். அதில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும். சிறுவர் விளையாட்டு பூங்கா, படகு சவாரி செய்வதற்கு ஏற்ற வகையில் ஏரியை புதுப்பிக்க வேண்டும்.

விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை கடந்த 2021-ல் உடைந்ததால், ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். உடைந்த தடுப்பு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். வளவனூர்- சிறுவந்தாடு சாலை அகலப்படுத்தப்பட வேண்டும். மலட்டாற்றில் இருந்து பிரியும் நரிவாய்க்கால் மூலம் ஏராளமான ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள இந்த வாய்க்காலை புனரமைக்க வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணையை புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ லட்சுமணனிடன் கேட்டபோது, "வளவனூர்- சிறுவந்தாடு சாலை பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளன" என்கிறார்.

அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர்தேக்கமாக மேம்படுத்த வேண்டும். விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள மயானத்தில் மின் மயானம் அமைக்க வேண்டும். வாதானூரான் வாய்க்கால் கரையை மேம்படுத்த வேண்டும். முண்டியம்பாக்கம் - ஒரத்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். கல்பட்டு நத்தமேடு ஏரிக்கரை சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து சாலையை அகலப்படுத்த வேண்டும். விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். விக்கிரவாண்டியில் நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு, வட்டாட்சியர் குடியிருப்பு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் விடுதி கட்டிடம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியிடம் கேட்டபோது, "அன்னியூரில் அண்மையில் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் புதிய காவல் உட்கோட்டம் திறக்கப்பட உள்ளது. கெடாரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் விடுதி மற்றும் பள்ளிக்கட்டிடத்துக்கு ரூ. 51.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மயிலம்: மயிலம் சட்டப்பேரவை தொகுதியில், மயிலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் அமைக்க வேண்டும். வடசிறுவளூரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். மயிலம் மற்றும் ரெட்டணையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மயிலம் தொகுதியில் அரசு கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். ரெட்டணையில் தீயணைப்பு நிலையம், வல்லத்தில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். ரெட்டணையில் வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், வல்லம் ஒன்றியத்தில் உள்ள செ.கொத்த மங்கலம் - அணிலாடி, மேல்களவாய்- ஈச்சூர், இல்லோடு- வெடால், நாட்டார்மங்கலம்- தொண்டூர், கீழையூர்- ரெட்டணை, தளவாளப் பட்டு- தென்புத்தூர் ஆகிய தரைப்பாலங்களையும், மயிலம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள வீடூர் அணைக்கட்டு, தென்ஆலப்பாக்கம்- பாதிராப்புலியூர், கொடியம்- அம்மனம்பாக்கம், தாதாபுரம்- அம்மனம்பாக்கம் ஆகிய தரைப்பாலங்களையும் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.

வீடூர் அணை

ஜெயங்கொண்டான் முதல் பேரணி வரையுள்ள ஒருவழிச்சாலையை இருவழி அகலச்சாலையாக மாற்ற வேண்டும். நாட்டார்மங்கலம்-தொண்டூர், பேரணி- பெரியதச்சூர், செண்டூர்- மயிலம் ஆகிய ஒருவழிச்சாலையை இருவழி சாலையாகவும் மாற்ற வேண்டும். மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 100 படுக்கைகள் கொண்ட வட்ட மருத்துவமனையாக்க வேண்டும். வீடூர் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். வீடூர் அணையில் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி விட ஏற்பாடு செய்ய வேண்டும். நாணல்மேடு தொண்டி ஆற்றின் குறுக்கேயும், மொடையூர்- மணியம்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை அமைக்க வேண்டும். இதெல்லாம் இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள்.

இதுகுறித்து மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவகுமாரிடம் கேட்டபோது, "ஜெயங்கொண்டான் முதல் பேரணி வரையுள்ள ஒருவழிச் சாலையை இருவழி அகலச் சாலையாகவும், நாட்டார்மங்கலம்-தொண்டூர், பேரணி- பெரிய தச்சூர், செண்டூர்- மயிலம் ஆகிய ஒருவழிச் சாலையை இருவழி சாலையாகவும் மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 95 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை" என்கிறார். விழுப்புரம் மாவட்டத்தின் மற்ற சட்டமன்ற தொகுதிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..

முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | போக்குவரத்து நெருக்கடியால் திக்கித் திணறும் என்.எச்.45 - ரேடார் கேமராவில் கண்காணிக்க திட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

13 hours ago

வாழ்வியல்

16 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்