வங்க கடலில் கற்கால மனிதனின் ஈமச்சின்னங்கள் - பூம்புகாரில் இருந்து 35 கி.மீ கிழக்கே கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: சோழ மன்னர்களால் கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன் காவிரி முகத்துவாரத்தில் பூம்புகார் நிர்மாணம் செய்யப்பட்டதாக சங்க இலக்கியம், வரலாறு கூறுகிறது. இதனுடன், தென் கிழக்கு ஆசிய நாடுகள் வணிகத் தொடர்பில் இருந்துள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் நகரம் அழிந்ததாக சீத்தலை சாத்தனாரின் மணி மேகலை குறிப்பிடுகிறது. பூம்புகாரின் அழிவுக்கு காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? எந்த காலக் கட்டத்தில் அது அழிந்தது? தற்கால பூம்புகார் எப்போது உருவானது? என்ற பல வினாக்களுக்கு விடை காணும் பொருட்டு இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

12 அமைப்புகள்: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் ரூ.8.90 கோடி நிதியுதவியுடன், ‘கணினி சார் மீட்டுருவாக்கல்’ என்ற தலைப்பின் கீழ் கடலுக்குள் மூழ்கிய பூம்புகார் நகரத்தை ஆய்வு செய்யும் பணி கடந்த 2019-2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுப்பணி, திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்தின் தொலையுணர்வுத் துறையை நிறுவிய பேராசிரியர் சோம.ராமசாமி (பூம்புகார் ஆய்வுத் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்) தலைமையில், நாடு முழுவதும் உள்ள 12 அமைப்புகள் மூலம் நடக்கிறது.

முதல் கட்ட ஆய்வில் கடலுக்கு கீழே 3 மிகப்பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி உள்ளதும், இதன் மூலம் அப்போதைய கடற்கரை தற்போதைய கடற்கரையில் இருந்து 4-50 கி.மீ கிழக்காக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பூம்புகார் துறைமுக நகரம், கப்பல் துறை, மணலால் மூடப்பட்ட சுற்றுச் சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன் கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டன.

ஆய்வின் தொடர்ச்சியாக பூம்புகாருக்கு 35 கி.மீ கிழக்கே வங்காள விரிகுடா கடலில் கற்கால மனிதர்களின் ஈமச் சின்னங்கள் கண்டறியப் பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கைரான் சின்னங்கள்: இது குறித்து பூம்புகார் ஆய்வுத்திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சோம.ராமசாமி கூறியது: பெருங்கற்காலம் தொட்டே ஆதிமனித இனம், இறந்தவர்களின் உடல்களைக் கற்பதுக்கை, கற்கிடை ஆகியவற்றில் படுக்கச் செய்து பூமிக்கு கீழாக குகைகளில் அடக்கம் செய்து இருக்கிறார்கள்.

அவற்றுக்குள் சென்று முன்னோர்களுக்கான ஈமக்காரியங்களை கற்கால மனிதர்கள் செய்து வந்துள்ளனர். அந்த ஈமச்சின்னங்கள் கைரான் மேடுகள், கைரான் வட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தற்கால பூம்புகாருக்கு கிழக்கே வங்கக் கடலில், 5 கி.மீ தூரத்தில், கைரான் வட்டங்கள், கைரான் மேடுகள் போன்ற ஈமச் சின்னங்களை தொல்லியல் ஆய்வுகள் வெளிக் கொணர்ந்ததுடன், பூம்புகார் நகரம் கடற்பகுதியிலும் பரவி இருந்ததையும் வெளிக் கொணர்ந்துள்ளது.

ஆய்வுப் பணி: பூம்புகார் துறைமுக நகரம் வங்கக் கடலில், கிழக்கே வெகு தூரம் பரவி இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் எனது தலைமையில், பேராசிரியர்கள் ஜெ.சரவணவேல், சி.ஜெ.குமணன், சென்னை அகில இந்திய கடல்சார் தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த டாக்டர் டி.ராஜசேகர் ஆகியோர் ஆய்வு செய்து வருகிறோம்.

அகில இந்தியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் ஆய்வு செய்ததில் தற்கால பூம்புகாரில் இருந்து கிழக்கே 30-35 கி.மீ தொலைவில் 2 சதுர கி.மீ பரப்பளவுக்கு இவைபோன்ற 7 அமைப்புகள் இருப்பது வெளிக்கொணரப்பட்டது. இவற்றில் 3 கைரான் மேடுகளாகவும், 4 கைரான் வட்டங்களாகவும் உள்ளன.

ஆரம்ப கால இடம்: இந்தக் கைரான் சின்னங்கள், பண்டைய ஆதிமனிதக் குடியிருப்புகள் இப்பகுதியில் இருந்து இருக்கலாம் என்றும், இதுவே பூம்புகாரின் ஆரம்ப கால இடம் என்றும் தோன்றுகிறது. ஆனால் இந்த 7 இடங்களில் மனிதனை அடக்கம் செய்ததற்கான தடயங்கள் கிடைக்க வில்லை. இருப்பினும் ஆதி மனிதனின் உருவாக்கம் மற்றும் வாழ்வியல் மற்றும் பூம்புகாரின் சரித்திரம் ஆகியற்றை தெரிந்து கொள்ள இவை ஆராயப்பட வேண்டியவை.

அதனடிப்படையில் இந்த வாரம் கப்பலில் கடலுக்குள் சென்று, ‘ரிமோட் ஆப்ரேட்டிங்க வெகிக்கல்’ (ஆர்ஓவி) மூலம் அந்த இடங்களை புகைப் படம் எடுக்க உள்ளோம். மல்டி பீம் எக்கோ சவுண்டர் (எம்பிஇஎஸ்) மூலம் நமக்கு ஏற்கெனவே கிடைத்த தரவுகளையும், எடுக்கப்பட உள்ள புகைப் படங்களையும் வைத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கைரான் சின்னங்கள், பண்டைய ஆதிமனிதக் குடியிருப்புகள் இப்பகுதியில் இருந்து இருக்கலாம் என்றும், இதுவே பூம்புகாரின் ஆரம்ப கால இடம் என்றும் தோன்றுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE