மலைக்கள்ளன் குகையின் பல்லாயிரம் ஆண்டு பழைமையான பாறைக் கீறல்களை அரசு பாதுகாக்க கோரிக்கை

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மூணாறிலிருந்து தேக்கடி செல்லும் வழியில் தேவிகுளம் அருகேயுள்ள மலைக்கள்ளன் குகையில் உள்ள 40,000 ஆண்டுகள் பழைமையான பாறைக் கீறல்களை சேதப்படுத்தும் சுற்றுலா பயணிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளம் மாநிலம் மூணாறு பகுதியிலிருந்து தேக்கடி செல்லும் மலைப்பாதையில் தேவிகுளம் அருகே 13 கிலோ மீட்டர் தூரத்தில் (தேவிகுளத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம்) உள்ளது 'மலைக்கள்ளன் குகை'. இக்குகையில் ஒரு திருடன் ஒளிந்திருந்து அந்தச் சாலையில் வரும் பயணிகளிடம் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததாகவும், அதனாலேயே இந்தக் குகை 'மலைக்கள்ளன் குகை' என்று அழைக்கப் படுவதாகவும் உள்ளூர்க்காரர்கள் தெரிவித்தனர்.

ஒரு பெரிய பாறையில் இருக்கும் இந்தக் குகை, பழைய கற்கால மனிதர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாக இங்கு நிறைய பாறைக் கீறல்கள் (Petroglyphs) காணமுடிகிறது. இதனை இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் ஆயுதங்களால் கீறல்களை ஏற்படுத்தி அழித்துவருகின்றனர். இதனை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூணாறிலிருந்து தேக்கடி செல்லும் சாலையிலுள்ள மலைக்கள்ளன் குகை

இதுகுறித்து பொறியாளரும், தொல்லியல் ஆய்வாளருமான மதுரையைச் சேர்ந்த வெ.பாலமுரளி கூறியதாவது: ''பழைய கற்கால மனிதர்கள் தங்களின் மனதில் தோன்றியதை ஏதோ ஒரு காரணத்திற்காக ஆவணப்படுத்தவும் அல்லது தங்களை தொடர்ந்து வரும் அடுத்த குழுவினருக்கு தொடர்புகொள்ள நினைத்து உருவாக்கியது பாறைக்குழிகள் (Cup Marks) எனப்படும். இந்த பாறைக்குழிகளை இந்தியாவில் நிறைய இடங்களில் காணமுடிகிறது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி பாறைக் கீறல்கள். இந்த வளர்ச்சியின் கடைசி கட்டம் வெவ்வேறு வண்ணங்களில் வரைந்த பாறை ஓவியங்கள். இந்தியாவில் இதுவரை 30 ஆயிரம் வருடங்கள் பழைமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மலைக்கள்ளன் குகை பாறைக்கீறல்கள் குறைந்த பட்சம் 40 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் ஆண்டுகள் பழைமையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

குகையிலுள்ள 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறைக்கீறல்களை சுற்றுலா பயணிகள் ஆணி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தங்களது பெயர்களை எழுதி சேதப்படுத்துகின்றனர்.

இந்தக் குகையில் உள்ள பாறைக்கீறல்கள் போலவே அச்சு அசலாக ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில், 'ப்லொம்போஸ்' என்னும் குகையில் கண்டுபிடித்துள்ளனர். அந்த நாட்டு அரசு அதன் காலத்தை 80 ஆயிரம் ஆண்டுகள் என கணித்துள்ளது. ஆனால், நமது மூதாதைய இனமான ஹோமோசேப்பியன்ஸ் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து 65 ஆயிரம் வருடங்கள்தான் ஆகியுள்ளதால் இங்குள்ள பாறைக் கீறல்களும், பாறைக் குழிகளும் 40,000 முதல் 50,000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்பது நமது தொல்லியல் அறிஞர்களின் கருத்து. இது ஒரு தோராயமான கணிப்புதான்.

பொறியாளரும், தொல்லியல் ஆய்வாளருமான வெ.பாலமுரளி

அத்தகயை பழைமையான ஒரு பண்பாட்டு சின்னத்தின் மீது சுற்றுலா பயணிகள் விவரம் அறியாமல் கூர்மையான ஆயுதங்களால் கிறுக்கி சேதப்படுத்துகின்றனர். வெளிமாநிலங்களில் தமிழர்களின் தொன்மை தொடர்பாக ஆய்வுகள் செய்ய முனைந்துள்ள தமிழக அரசு தொல்லியல்துறை மலைக்கள்ளன் குகையில் ஆய்வு மேற்கொண்டால் கூடுதல் தரவுகள் கிடைக்கும். அதுவரை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்க கேரளம் மாநில அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்து பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

மேலும்