தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் 3 சிறுவர்களுக்கு இருதய ஓட்டை அடைப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் ஒரே நாளில் 3 சிறுவர்களுக்கு இருதயத்தில் இருந்த ஓட்டையை சரி செய்யும் சிகிச்சையை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஜி.சிவக்குமார், மூத்த இருதய மருத்துவ நிபுணர் பாலமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருதய பிரிவில் இருதய ரத்தக்குழாய் நுண் சிகிச்சை ஆய்வுக் கூடம் (கேத்லேப்) தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். தற்போது மேலும் ஒரு மைல் கல்லாக அதிநவீன இருதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

பிறக்கும் குழந்தைகளில் 100-ல் ஒருவருக்கு இருதய கோளாறு இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு பெரும்பாலும் இருதயத்தில் உள்ள இரண்டு அறைகளுக்கு நடுவே உள்ள சுவரில் ஓட்டை இருக்கும். இந்த ஓட்டைகள் ஆரம்ப காலகட்டங்களில் திறந்த இருதய அறுவை சிகிச்சை, பைபாஸ் அறுவடை சிகிச்சை மூலமாகவே சரி செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை இல்லாமல் ஆஞ்சியோகிராம் மூலம் ஓட்டைகளை அடைக்கும் அதிநவீன சிகிச்சை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த முறையில் தழும்பு இல்லாமல், ரத்தம் வீணாகாமல் ஓட்டையை அடைக்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சை இதுவரை சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் இருதய ஓட்டையை சரி செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிநவீன ஆஞ்சியோ சிகிச்சை: இருதய மருத்துவ நிபுணர் பாலமுருகன் தலைமையில், குழந்தைகள் இருதய மருத்துவ நிபுணர் செந்தில்குமார், மருத்துவர்கள் கணேசன், வெங்கடேஷ், ஆலன்பென்னி மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர், ஒரே நாளில் 4 வயது குழந்தை, 14 வயது சிறுமி, 15 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கு அதிநவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

தற்போது 3 பேரும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சை அனைத்தும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். இது போன்ற அதிநவீன சிகிச்சைக்கு நோயாளிகள் இனிமேல் சென்னை வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் ஆர்.பத்மநாபன், குமரன், மருத்துவத்துறை பேராசிரியர்கள் ராஜவேல், பரத், மணிமேகலை, மயக்கவியல் துறை பேராசிரியர் வி.மனோரமா, குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் அருணாசலம் ஆகியோர் உடனிருந்தனர். ஒரே நாளில் 4 வயது குழந்தை, 14 வயது சிறுமி, 15 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கு அதிநவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE