பழங்குடியினர் கொண்டாடும் நெல் திருவிழா: கூடலூரில் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வழிபாடு!

By ஆர்.டி.சிவசங்கர்


கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் காய்கறி, தேயிலை முக்கிய விவசாயப் பயிர்களாக உள்ளன. சில சமவெளிப் பகுதிகளில் நெல் சாகுபடிசெய்யப்படுகிறது. தமிழக - கேரள எல்லையையொட்டியுள்ள கூடலூரின் சில பகுதிகளிலும், ஈரோடு மாவட்டத்தையொட்டியுள்ள தெங்குமரஹாடா கிராமத்திலும் நெல் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கான விழாவைக் கொண்டாடுவது, நீலகிரி மாவட்டத்திலுள்ள பனியர், காட்டு நாயக்கர், முள்ளு குரும்பர் மற்றும் ஊராளி குரும்பர் ஆகிய பழங்குடியினரின் வழக்கம். இவர்கள், விவசாயத்துக்காகப் பயன்படுத்தும் நிலத்தின் உரிமையாளர்கள் மவுண்டாடன் செட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களும் இந்த விழாவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

கூடலூர் சுற்றுவட்டாரத்திலுள்ள புத்தூர் வயல், தொரப்பள்ளி, நெம்பாலக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக ஜீரகசால், கெந்தகசால், மர நெல் உட்பட பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வருகின்றனர். வனப் பகுதிகளை ஒட்டிய கிராமங்கள் என்பதால், யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து தங்களது விவசாய பயிர்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க, இந்த அறுவடை திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், ஐப்பசி மாதத்தில் வயல்களை தயார் செய்து நாற்று நட்டு, வயல்களில் வளரும் தரமான பால் கதிர்களை பழங்குடியின மக்களின் பொது குலதெய்வமான வன தேவதை கடவுளுக்கு படைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் (ஐப்பசி) துலாம் மாதத்தின் 10-ம் நாளன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது.

விரதமிருக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, விளைந்துள்ள நெற் கதிர்களை அறுத்து, அதை கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்வதே இத்திருவிழாவின் முக்கிய அம்சம். இதற்காக அறுக்கப்பட்ட கதிர்களை வழிபட்ட பின்னர், தாங்கள் குடியிருக்கும் வீட்டின் முகப்பு, நெல் உலர்த்தும் களம், வயலின் ஒரு பகுதி ஆகிய 3 இடங்களில் காப்பு கட்டுவதைபோல கட்டுகின்றனர்.

விளைந்துள்ள நெற்கதிரை அறுத்தெடுத்து தோளில் சுமந்தவாறு
‘வெளியபெறா’ என்ற இடத்துக்கு கொண்டுவரும் பனியர் இன மக்கள்.

காப்பு கட்டும்போது வனத்தில் தாங்கள் பயன்படுத்தும் பிரத்யேக மூலிகையுடன், கதிர், மாவிலை, ஆல மர இலை மற்றும் மூங்கில் இலைகளையும் சேர்த்துக் கொள்கின்றனர். விளைந்துள்ள நெற் கதிரை பனியர்இன மக்கள் அறுத்து, அங்கிருந்து எடுத்து வந்து அம்பலக்கூட்டன் என அழைக்கப்படும் கோயிலின் உதவியாளர் மூலமாக ‘வெளியபெறா’ என அழைக்கும் இடத்தில் வைத்து பிறருக்கும் விநியோகிப்பர்.

விளைந்துள்ள நெல்லை கடவுளுக்கு படைத்து நன்றி தெரிவித்துவிட்டு, பின்னர் தங்கள் இல்லத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே இதன் நோக்கம். அனைவருக்கும் நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிரசாதமாக கிடைத்த நெற்கதிரை வீட்டில் பூஜை அறையில் வைத்தால், உணவுப் பஞ்சம் இருக்காது, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இதுதொடர்பாக பழங்குடியின ஆய்வு மைய இயக்குநர் உதயகுமார் கூறும்போது, "புத்தரி என்பது பழங்குடியினரின் நன்றி பாராட்டும் திருவிழா. புத்தரி என்றால் புதிதாக அறுக்கப்பட்ட கதிர். மலை மாவட்டமான நீலகிரியில் நெல் சாகுபடியை முதன் முதலில் தொடங்கியவர்கள் பனியர்களே. இதன் காரணமாகவே பனியர் இன மக்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரையாக காய்ந்த நெற் கதிர்களை இன்றும் பயன்படுத்துகிறார்கள். தங்கள் வயலில் இல்லாவிட்டாலும், வெளி இடங்களில் இருந்தாவது வாங்கி வந்து கூரையாகப் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

பழங்குடியினர் கூறும்போது, "புத்தரி விழா பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், தற்போது மாறிவிட்ட சூழலால் வயலில் இறங்கி வேலை செய்வது வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும், முள்ளு குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் 10 செட்டில்மென்ட்களில் உள்ளனர். இங்கு வசிப்பவர்கள் சிவன்,ராமர் - லட்சுமணன் என தங்களுக்கு விருப்பப்பட்ட 10 கடவுள்களை வணங்குகின்றனர். அதனால், புத்தரி திருவிழாவின்போது தாங்கள்பயன்படுத்தும் ஆயுதங்களான அம்பு, வில்ஆகியவற்றை சுத்தம் செய்து, சந்தனமிட்டுவணங்குகின்றனர். மேலும், இளம்சிறுவர்களுக்கு வில்-அம்பு பயிற்சியையும் அந்த தினத்தில் தான் தொடங்குகிறார்கள்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE