விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொலைத் தொடர்பு வசதி இல்லாத கிராமங்களை இன்று பதிவிடுகிறோம்.
அந்த காலத்தில் அரசு ஊழியர்களுக்கு, ‘பனிஷ்மெண்ட் ஏரியா’ என்று குறிப்பிட்டு, ‘தண்ணீர் இல்லாத ஊருக்கு மாற்றுகிறேன்’ என்று சொல்வார்கள். ஆனால், இன்று அதை, ‘தொலைதொடர்பு அறவே இல்லாத அல்லது ‘சிக்னல்’ கிடைக்காத ஊருக்கு மாற்றி விடுவேன்’ என்று மாற்றிச் சொல்லலாம். குடிக்கத் தண்ணீர் இல்லாவிட்டால் கூட இருப்பார்கள்; ‘நெட்வொர்க்’ சேவை கிடைக்காவிட்டால் குமுறி விடுவார்கள்.
மொபைல் போன் மனிதனின் அடிப்படை ஜீவாதார உரிமையாகி ஆண்டுகள் கடந்து விட்டன. 4 ஜி தாண்டி, 5 ஜி நெட்வொர்க் தேடிச் செல்லும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைக்கும் தொலை தொடர்பு சேவை முற்றிலும் இல்லாத சில கிராமங்கள் உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அருள்நிதி, சுனைனா நடித்த ‘வம்சம்’ படத்தில் செல்போன் சிக்னலுக்காக மரத்தில் மொபைல் போனை கட்டி தொங்கவிட்டு நாயகனும், நாயகியும் காத்திருப்பார்கள். ‘சிக்னல்’ கிடைக்காத சிக்கலை, கிராமத்தில் உள்ளவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தக் காட்சி விளக்கும்.
இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகளைக் கடந்தாலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செத்தவரை, போத்துவாய், ராமராஜன்பேட்டை, தடாகம், பழவலம், மலையரசன் குப்பம், கணக்கன் குப்பம் ஆகிய கிராமங்களில் இன்றைக்கும் இதுதான் நிலைமை. இந்த கிராமங்களையொட்டி, கிழக்கு மலைத்தொடர் உள்ளது. இக்கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் வசிப்பவர்கள், ‘சாதாரண 2 ஜி சிக்னலுக்காக, கவனிக்கவும்; 5 ஜி அல்ல 2 ஜி மொபைல் போன் சிக்னலுக்காக அருகில் உள்ள குன்றுகளின் மீது ஏறி பேசிவிட்டு, கீழே கிராமங்களுக்குள் வருகின்றனர்.
» “அது நடந்திருக்கக் கூடாது'” - பசும்பொன்னில் இபிஎஸ்ஸுக்கு எதிரான கோஷம் குறித்து ஓபிஎஸ் கருத்து
» “பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் வன்முறை வெறியாட்டம்... வீடியோவை வெளியிட தயாரா?” - இபிஎஸ்
இது குறித்து தடாகம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் கூறியது: எங்கள் பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற நகரங்களை நோக்கி வேலைக்குச் செல்வது வழக்கம். திருவிழா, குடும்பங்களின் நல்ல நிகழ்வு மற்றும் துக்க நிகழ்வு காலங்களில் அவ்வப்போது கிராமங்களுக்கு வந்து செல்வார்கள். இக்கிராமங்களில் இருந்து ஏதேனும் ஒரு அவசர தகவலை வெளியூர்களில் உள்ளவர்களுக்கு அனுப்ப, 108 அவசர ஊர்தியை வரவவைழக்க ‘சிக்னல்’ கிடைக்காமல் தவியாய் தவிக்கிறோம்.
அருகில் உள்ள மலைக்குன்றுகளை கடந்து அந்தப்புறம் சென்று அல்லது மலைக்குன்றின் மேல் ஏறி ‘சிக்னல்’ கிடைக்கப் பெற்று தகவல் பரிமாறும் அவல நிலையை எங்கள் பகுதியில் நாள்தோறும் அனுபவிக்கிறோம். படிக்கும் மாணவர்கள் ஆன் லைன் வகுப்புகளுக்காக மலைக்குன்றுகளில் ஏறி, படிக்கின்றனர். எங்கள் பகுதி சிக்கலைத் தெளிவாக குறிப்பிட்டு, மத்திய தொலைதொடர்புத்துறைக்கு மனு அனுப்பினோம். தொலைத்தொடர்புத்துறை அனுப்பிய பதிலில், ‘தற்போது தங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்களில் இல்லை.
எதிர் வரும் காலங்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் முயற்சித்தால் அமைக்கலாம்’ என்று பதில் அனுப்பியிருக்கின்றனர். இடையே அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். இங்குள்ள மலைக்குன்றுகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக உள்ளது. ஒரு குன்றில் டவர் அமைத்தால் அடுத்த குன்றால் ‘சிக்னல்’ தடைபடும் என்ற நிலை உள்ளது. இதையெல்லாம் ஆராய்ந்து, டவர் அமைக்க பெரும் பொருள் செலவு ஆகும் என்று கூறி திட்டத்தை கைவிட்டு விட்டனர்.
இங்கு வரும் வருவாயை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்கள் இதை செய்ய முன்வரவில்லை. தொடர்ந்து, இதற்காக அலைந்து அலைந்து வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கிறோம். எங்கள் பகுதிக்கு இதுதான் நிலைமை. எந்த வகையிலும் இதை மாற்ற முடியாது. இப்போது நாங்களே இதற்காக அலைவதை விட்டு விட்டோம் என்று விரக்தியின் உச்சியில் பேசுகிறார்.
இருக்கும் சூழலில், பிஎஸ்என்எல் மனது வைத்தால் மட்டுமே செத்தவரை, போத்துவாய், ராமராஜன்பேட்டை, தடாகம், பழவலம், மலையரசன் குப்பம், கணக்கன் குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள் செல் போனை பயன்படுத்த முடியும். இது குறித்து தொலைத்தொடர்பு நிறுவன வட்டாரங்களில் கேட்டபோது, “பிஎஸ்என்எல் கட்டுக்கோப்பான நிறுவனம், அது நினைத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. கடலுக்கடியில் கேபிள் போட்டு அந்தமான் தீவுக்கு தொலை தொடர்பு சேவை அளிக்கும் அளவுக்கு மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் திறன் உள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்களுக்கான சேவையில் இதுபோன்ற இழுத்தடிப்புகள் நடக்கின்றன. தனியார் நிறுவனங்கள், சில மேலதிகாரிகளின் துணை கொண்டு, பிஎஸ்என்எல் செல்போன் டவர்களின் பவரை (reachability) குறைப்பது உண்டு. இதன் காரணமாக பல இடங்களில் சிக்னல் சிக்கல் ஏற்படும். அதன்பிறகு அங்கு தனியார் நிறுவனங்கள் நுழைந்து விடும்; பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அங்கு பின்தங்கி விடும். தற்போது இருக்கும் சூழலில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புதிதாக செல்போன் டவர் அமைக்கும் எண்ணம் இல்லை. தனியார் நிறுவனங்கள்தான் டவர் அமைக்க வேண்டும்.
நீங்கள் குறிப்பிடும் இப்பகுதி சற்று சிக்கலான மலைக்குன்றுகளை கொண்ட பகுதி. இங்கு டவர் அமைக்க கூடுதல் செலவாகும். மேலும், கிராம பகுதிகளில் இணைய இணைப்பு குறைவாக இருக்கும். இங்கு டவர் அமைப்பதால் கிடைக்கும் வருவாய் குறைவு. மேலும், இங்கு டவர் அமைக்க வனத்துறையின் கெடுபிடி உள்ளது. இதனால், இங்கு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கால்பதிக்க தயங்குகின்றன என்று தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சேவை நோக்குடன் பிஎஸ்என்எல்-க்கு அழுத்தம் கொடுத்து, இதை செய்ய முற்பட்டால் ஏதேனும் நடக்கும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..
முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | அழிவின் விளிம்பில் 40,000 பனை மரங்கள்!
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago