வாரணாசி டூ ஆம்ஸ்டர்டாம்: கிட்டிய பாஸ்போர்ட்... வெளிநாட்டு எஜமானருடன் பயணிக்கும் நாய்!

By செய்திப்பிரிவு

வாரணாசி: இந்தியாவின் வாரணாசி நகரில் இருந்து நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகருக்கு தனது வெளிநாட்டு எஜமானருடன் பயணிக்க உள்ளது நாய் ஒன்று. முறையான விசா மற்றும் பாஸ்போர்ட் கிட்டிய நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

“என் பெயர் மெரல் பாண்டன்பெல் (Meral Bontenbel) நான் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் வசித்து வருகிறேன். நான் இங்கு சுற்றுலா நிமித்தமாக வந்திருந்தேன். வாரணாசி நகரை சுற்றிப் பார்த்தேன். நான் இந்த நகரின் வீதியில் நடந்து சென்றபோது ஜெயா என்ற நாய் எங்களிடம் வந்தாள். அவள் பார்க்க அழகாக இருந்தாள். எங்களை பின்தொடர்ந்து வந்தாள்.

அப்போது துரதிர்ஷ்டவசமாக மற்றொரு நாய் அவளிடம் சண்டையிட்டது. அதனை ஒருவர் தடுத்து ஜெயாவை மீட்டார். முதலில் அவளை வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் அவளை அப்படியே விட முடிவு செய்தேன்.

ஆனால், நாய் வளர்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பம் அவள் மூலம் பூர்த்தி ஆகியுள்ளது. ஆம், நான் அவளை வளர்க்க முடிவு செய்தேன். அவளை முறையான அனுமதியுடன் நெதர்லாந்து கொண்டு செல்ல ஆறு மாத காலம் பிடித்தது. நான் இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன்” என நெதர்லாந்தை சேர்ந்த நாயின் எஜமானர் தெரிவித்துள்ளார். கம்பேனியன் அனிமல் பாஸ்போர்ட் மூலம் அந்த நாய் வாரணாசியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு விரைவில் பயணிக்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE