விருதுநகர்: பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது பட்டாசுத் தொழில். முதன்முதலில் சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார், சண்முக நாடார் ஆகியோர் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தயாரிப்பு, பட்டாசு தயாரிப்பு தொழிலை கற்றனர். பட்டாசுத் தொழிலுக்கு ஏற்ற வெப்பநிலை மற்றும் பருவநிலை சிவகாசியில் இருந்ததை அறிந்த இருவரும், 1923-ம் ஆண்டு பட்டாசு ஆலையையும், தீப்பெட்டி ஆலையையும் தொடங்கினர்.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 315 பட்டாசு ஆலைகள், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 770 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1,085 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. 2,963 பட்டாசு சில்லறை விற்பனை கடைகளும், 921 பட்டாசு சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன.
» தாய்க்காக சென்னையில் குடியேறும் ஆமிர்கான்
» வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
பட்டாசு ஆலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்களான காகித ஆலைகள், அச்சுத் தொழில், வாகனப் போக்குவரத்து, சுமைப் பணித் தொழிலாளர்கள், வெடிபொருள் மருந்து மற்றும் ரசாயன உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பேரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, ஸ்பார்க்லர் உள்ளிட்ட பொருட்களே பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள். இந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகள், ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகள், இவையிரண்டும் இணைந்த வகை பட்டாசுகள் என 3 வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு வகையிலும் சுமார் 200 முதல் 250 வகையிலான பட்டாசு ரகங்கள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தொடக்கத்தில் தீபாவளி, தசரா பண்டிகைகளுக்காக மட்டுமே சீசன் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமண வரவேற்பு, காதுகுத்து, கோயில் திருவிழாக்கள், தேர்தலின்போது மட்டுமின்றி இறுதி ஊர்வலங்களிலும் பட்டாசு வெடிக்கும் பழக்கம் உள்ளதால் பட்டாசுக்கான தேவை ஆண்டு முழுவதும் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.
வெடிவிபத்து அபாயம்: மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசு சத்தத்திலும் தொழிலாளர்கள் பலரின் வேதனைக் குரல் கலந்திருப்பது நமக்குக் கேட்பதில்லை. ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் சிவகாசியில் நூற்றாண்டு காணும் பட்டாசுத் தொழிலில் தொடரும் சின்ன சின்ன விதிமீறல்கள்கூட, தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் பெரும் விபத்தில் முடிவடைகிறது.
ஆண்டுதோறும் பட்டாசு ஆலைகளில் சிலர் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. 2012 செப்டம்பர் 5-ம் தேதி சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதில் பலர் கை, கால்களை இழந்தனர்.
உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்தும், பிழைப்புக்கு வேறு வழியில்லாததால் தொடர்ந்து பட்டாசு ஆலைக்கு பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே ரெங்கபாளையம் பட்டாசு கடையில் பணியாற்றிய 13 பேர் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தொடரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து விதிமுறை மீறல்களைத் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாககட்டிட வடிவமைப்பு, தரைத்தளம், ஜன்னல் போன்றவற்றை அமைக்க வேண்டிய விதம், ஜன்னல்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும். தரையில் 3 மி.மீ. தடிமனுள்ள ரப்பர் ஷீட் விரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு கட்டிடத்துக்கும் மற்றொரு கட்டிடத்துக்கும் இடையே குறைந்தபட்சம் 18 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்துக்குள் 50 கிலோ எடைக்கு மேல் வெடிமருந்துப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
வெடி மருந்து திரி வெட்டுவதற்கு இரும்பிலான கத்திரிகள், பிளேடுகளை பயன்படுத்தக் கூடாது. திரிகளை தரையில் வைத்து வெட்டக் கூடாது. பட்டாசு ரகங்களை உலர்மேடை அல்லாத வேறு இடங்களில் காயவைக்கக் கூடாது. மொபைல் போன்களை தொழிற்சாலைக்குள் கொண்டு செல்லக் கூடாது. செய்து முடிக்கப்பட்ட பட்டாசு ரகங்களை உற்பத்தி அறைகளில் வைக்கக் கூடாது உள்ளிட்ட ஏராளமான விதிமுறைகள் அறிவுறுத்தப்படுகின்றன.
இவை ஆலைகளில் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இது தவிர பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் தன்மை குறித்தும், அவற்றை கவனமாக கையாள்வது குறித்தும் தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பட்டாசுத் தொழில் நிலைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago