வார விடுமுறையில் கட்டணமின்றி மாற்றுத் திறனாளிகளை அழகுபடுத்தும் சிவகங்கை அழகு நிலைய உரிமையாளர்!

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை அழகு நிலைய உரிமையாளர் வாரவிடுமுறையில் 15 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்து அழகு படுத்தி வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் ஆவரங்காட்டைச் சேர்ந்தவர் வேல்முருகன் (51). பிஏ பட்டதாரியான இவர், சிவகங்கை தெற்கு ராஜ வீதியில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இவரிடம் 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடையில் எப் போது கூட்டம் இருக்கும். பரபரப்பாக இருக்கும் இவர், வாரவிடுமுறையான செவ்வாய்க்கிழமை சமூகசேவை செய்து வருகிறார். குறிப்பாக மனநலம் பாதித்தோர், உடல் ஊனமுற்றோர் என மாற்றுத் திறனாளிகள், யாசகர்களுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்து அழகுபடுத்தி வருகிறார். அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று இச்சேவையை செய்து வருகிறார். வார விடுமுறையன்று குறைந்தது 15 முதல் 20 பேர் வரை அழகுபடுத்துகிறார்.

அன்பாகப் பேசுவதால் மனநலம் பாதித்தோர், யாசகர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியுடன் அவரிடம் முடித்திருத்தம் செய்து கொள்கின்றனர். இத்தகைய சேவை செய்து வரும் வேல்முருகனை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில் ‘ வசதி படைத்தோர் அழகு நிலையங்களுக்குச் சென்று முடி திருத்தம் செய்து கொள்கின்றனர். அழகுநிலையங்களுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், முடித்திருத்தம் செய்து கொள்ள வசதி இல்லாத யாசகர்கள், ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு நேரில் சென்று கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக சேவை செய்கிறேன். இச்சேவையை கடந்த 8 மாதங்களாகச் செய்து வருகிறேன்’’ என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE